தவெக வெற்றியால் உருவான தொங்கு சட்டசபையில், காங்கிரஸ் ஆதரவு அறிவித்துள்ள நிலையில், விசிக மற்றும் இடதுசாரிகள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. அதிமுக-திமுக இணைந்து ஆட்சியமைக்கும் பேச்சு பரவியபோதும், ஸ்டாலின் அதை மறுத்து, தவெக ஆட்சியமைப்புக்கு திமுக தடையில்லை, முதல் ஆறு மாதம் புதிய அரசுக்கு எந்த சிக்கலும் செய்யமாட்டோம் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் தேர்தலிலேயே 34.92% வாக்குகளை பதிவுசெய்திருக்கும் தவெக 108 தொகுதிகளில் வெற்றிபெற்று 1967-க்கு பிறகு திமுக, அதிமுக இரண்டில் ஒன்றில்லாமல் தனிபெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது. மேலும் முதல் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற எம்ஜிஆரின் (33.52%) சாதனையை முறியடித்து விஜய் சாதனை படைத்துள்ளார்.
தவெக 108, திமுக கூட்டணி 73 மற்றும் அதிமுக கூட்டணி 53 தொகுதிகளில் வென்று தொங்கு சட்டசபை நீடித்த நிலையில், தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிமைக்க காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரிகள் கட்சிகளிடமிருந்து ஆதரவை கோரியது.
இதில் 5 தொகுதிகளை வைத்திருக்கும் காங்கிரஸ் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், விசிக மற்றும் இடதுசாரிகள் தங்களுடைய ஆதரவை இன்னும் தெரிவிக்கவில்லை. தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்குமா, புதிய ஆட்சி அமையுமா என்ற சூழலில் தான், திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.
நேற்று வெளியான செய்தியானது, அதிமுகவிற்கு திமுக ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளதாகவும், அதிமுகவும் அதற்கு இணங்கியுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இதற்கு மேலிடம் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தசூழலில் தான் அதை மறுக்கும் விதமாக டைம்ஸ் ஆஃப் இந்தியா உடன் முக ஸ்டாலின் பேசிய செய்தி வெளியாகியுள்ளது. அந்த செய்தியில், தவெக ஆட்சியமைக்க திமுக இடையூறு செய்யாது வழிவிடும் என்றும், முதல் 6 மாதத்திற்கு புதிய ஆட்சியை எந்த தொந்தரவும் திமுக செய்யாது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் தவெக தலைவர் திமுக அரசின் திட்டங்களை தொடரவேண்டும் என்றும் எனவும், மாதம் மகளிருக்கு 2500 கொடுப்பது கடினமான காரியம் என்பதால் திமுக அரசு வழங்கிய 1000 ரூபாயை தொடர்ந்து வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.