விஜய்க்கு எதிராக கைக்கோர்க்கும் திமுக-அதிமுக..? EPS முதலமைச்சர்..? அதிரவைத்த தகவல்!
விஜயின் தவெக ஆட்சியைத் தடுக்க திமுக-அதிமுக இணைந்து மாற்று ஆட்சியை அமைக்க முயல்கின்றன என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக முன்மொழிந்து, மேலிடம் பச்சைக்கொடி காட்டியதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த முடிவுக்கு கூட்டணி கட்சிகள், மக்கள் எப்படி எதிர்வினை அளிப்பார்கள் என்பது பெரிய கேள்வியாக உள்ளது.
தமிழக அரசியலை பொறுத்தவரை இருபெரும் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையேயான இருமுனைப் போட்டியே இருந்துவந்த நிலையில், நடிகர் விஜயின் வருகையால் இந்த முறை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலை தமிழகம் கண்டுள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, விஜய் ஒரு முக்கியக் காரணியாக இருந்தாலும், தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது எனத் தெரிவித்திருந்தன. ஆனால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் இளைஞர்களின் செல்வாக்கும் இந்தத் தேர்தல்களில் விஜயை ஒரு கணிக்க முடியாத சக்தியாக மாற்றியது.
இந்தசூழலில் 2026 சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளையும் ஓரங்கட்டிய தவெக 35% சதவீதம் வாக்குசதவீதத்தை பதிவுசெய்து 108 தொகுதிகளில் வெற்றிபெற்று வரலாறு படைத்துள்ளது. 1967-க்கு பிறகு திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சி அல்லாமல் 3வதாக ஒரு கட்சி தனிம்பெரும்பான்மை பெருவது இதுவே முதல்முறை. மேலும் முதல் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற எம்ஜிஆர்ரின் சாதனையை விஜய் முறியடித்துள்ளார்.
இந்தசூழலில் விஜய் சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றிபெற்றாலும் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால் மாற்று கட்சிகளின் ஆதரவு தவெகவிற்கு தேவையாக இருக்கிறது. இந்நிலையில் தான் 5 தொகுதிகளை வைத்திருக்கும் காங்கிரஸ் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற தேர்தலிலும் தவெக உடன் இணைந்து போட்டியிடுவதாக ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்நிலையில் 108+5 உடன் 112 தொகுதிகளை வைத்திருக்கும் தவெக பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 6 இடங்கள் தேவையாக இருக்கிறது. விசிக மற்றும் இடதுசாரிகளுக்கு விஜய் கடிதம் எழுதியிருக்கும் நிலையில் அவர்கள் நாளை மறுநாள் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர். மேலும் ஆளுநரும் இன்னும் விஜயை பதவியேற்க அழைப்பு விடுக்காமல் இருந்துவருகிறார்.
இப்படியான சூழலில் அடுத்து என்ன நடக்கும்? தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்குமா? என்ற குழப்பம் நீடித்துவரும் நிலையில், விஜய்க்கு எதிராக திமுக மற்றும் அதிமுக இணைந்து களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. திமுக ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளதாகவும், அதிமுகவும் அதற்கு இணங்கியுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இதற்கு மேலிடம் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகவல் வெளியாக இணையத்தில் இவ்விவகாரம் பூதாகர செய்தியாக வெடித்துள்ளது.
இந்த நிலைப்பாட்டை திமுகவும், அதிமுகவும் எடுத்தால் கூட கூட்டணி கட்சிகள் இல்லாமல் அவ்விரு கட்சிகளாலும் ஆட்சியை நிறுவ முடியாது. திமுக அதிமுகவுடன் இணைய முடிவுசெய்தால் கூட்டணி கட்சிகளான விசிக, இடதுசாரிகள், யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் எப்படி ஆதரவு கொடுக்கும் என்ற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் மக்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பதும் பெரிய கேள்வியாக இருக்கிறது. எப்படி இருப்பினும் எப்போதும் இல்லாதவகையில் 2026 தமிழ்நாடு தேர்தல் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் நகர்ந்துவருகிறது.

