திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ரகசிய ஆய்வுக்கு சென்ற அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம், அர்ச்சகர் ஒருவர் சிறப்பு தரிசனத்துக்கு ரூ.4000 மற்றும் Gpay மூலம் பணம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அர்ச்சகர் உட்பட மூவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையை எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்தார்.
அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாதாரண உடையில் முக கவசம் அணிந்து ரகசியமாக திடீர் ஆய்வு செய்ய சென்றார். கோவில் வளாகம், அன்னதானம் வழங்கும் இடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், தரிசன வரிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு செய்தார்.
அப்போது விரைவாக தரிசனம் செய்ய பணம் வசூலிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தரிசன வரிசையில் முக கவசம் அணிந்து ரகசிய ஆய்வு செய்தபோது அமைச்சர் என்று தெரியாமல் அர்ச்சகர் ஒருவர் விரைவாக தரிசனம் செய்ய ரூபாய் 4000 கேட்டுள்ளார். அதற்கு அமைச்சர் கையில் பணம் இல்லை என்று கூறியதால் gpay இல் அனுப்புங்கள் என்று அந்த அர்ச்சகர் கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அர்ச்சகர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு நடத்தியதை விமர்சித்து திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் காலையில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், திருச்செந்தூர் கோயிலின் புகழை சிறுமைபடுத்திய அமைச்சர் ரமேஷுக்கு கண்டனங்கள். திருச்செந்தூரில் ஆய்வு என்ற பெயரில் அமைச்சர் ரமேஷ், அர்ச்சகர்களை இழிவுபடுத்தி உள்ளார். திருச்செந்தூர் கோயில் திருசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை அமைச்சர் ரமேஷ் இழிவுபடுத்தினார். கோயிலில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அர்ச்சகர்கள் உதவிசெய்யும் வகையில் உள்ளனர், அறநிலையத் துறை சாராத திருசுதந்திர அர்ச்சகர்கள் மரபு வழியாக உதவுகின்றனர்” என கூறியிருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அமைச்சர் ரமேஷ், “மாண்புமிகு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்களே (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.
பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை.
நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள்.
தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை.
இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!” என கூறியுள்ளார்.