சிறப்பு தரிசனம் செய்ய அமைச்சரிடமே பணம் கேட்ட அர்ச்சகர்; திருச்செந்தூர் கோயிலில் பரபரப்பு
அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆய்வு செய்ய சென்ற போது அர்ச்சகர் அவரிடம் விரைவாக தரிசனம் செய்ய ரூ.4000 பணம் கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாதாரண உடையில் முக கவசம் அணிந்து ரகசியமாக திடீர் ஆய்வு செய்ய சென்றார். கோவில் வளாகம், அன்னதானம் வழங்கும் இடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், தரிசன வரிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு செய்தார். பின்னர் பக்தருடன் சேர்ந்து அன்னதானம் சாப்பிட்டு அன்னதான உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
அன்னதான அலுவலகத்தை மேற்பார்வையிட்டபோது பணியை சரிவர செய்யாத கோவில் பணியாளர்களிடம் விளக்க கடிதம் எழுத சொல்லி உத்தரவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து விரைவாக தரிசனம் செய்ய பணம் வசூலிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தரிசன வரிசையில் முக கவசம் அணிந்து ரகசிய ஆய்வு செய்தபோது அமைச்சர் என்று தெரியாமல் அர்ச்சகர் ஒருவர் விரைவாக தரிசனம் செய்ய ரூபாய் 4000 கேட்டுள்ளார். அதற்கு அமைச்சர் கையில் பணம் இல்லை என்று கூறியதால் gpay இல் அனுப்புங்கள் என்று அந்த அர்ச்சகர் கேட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆய்வு குறித்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தனது X தளத்தில், "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தொடர்ந்து பக்தர்கள் தரிசனம், அன்னதானம், அடிப்படை வசதிகள், சொத்துப் பதிவேடு விவரங்கள், திருப்பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள கோயிலுக்கு வர வேண்டிய வருவாய் போன்ற பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம். முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடு இன்றி விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

