\
Rajmohan Says Puthiya Thalaimurai Cable Issue Has Been Corrected
ராஜ்மோகன்Pt web

அரசு கேபிளில் புதிய தலைமுறை தெரியாதது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!

சில இடங்களில் புதிய தலைமுறை கேபிள் அலைவரிசை பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டதாக புகாரெழுந்தது. தற்போது அந்த பிரச்னை சரிசெய்யப்பட்டு விட்டது என அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார்.
Published on

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், தமிழ்நாடு அரசு கேபிளில் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி தெரியவில்லை எனப் புகாரெழுந்தது. இந்தப் பின்னணியில், முதல்வர் விஜய், பதவியேற்ற நாளிலிருந்தே ஊடகங்களிடம் பேசவில்லை என்பதோடு, டெல்லியிலும் பத்திரிகையாளர்களைச் சந்திக்காதது விமர்சனமானது குறித்து பெருஞ்செய்தி வெளியிட்டதே புதிய தலைமுறை இருட்டடிப்பு செய்யப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம் என கேள்வி எழுந்திருந்தது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி, புதிய தலைமைமுறை
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி, புதிய தலைமைமுறைpt web

இதையடுத்து, “உண்மையைப் பேசும் மக்கள் ஊடகமான புதிய தலைமுறையை இருட்டடிப்பு செய்வதா? ஊடக சுதந்திரத்தின் மீது அடக்குமுறையை ஏவி ஜனநாயகத்தைத் தாக்குவதா?” என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் உள்பட பலரும் சமூகவலைதளங்களில் கடும் எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு முதலாக மெல்ல பழையபடி மீண்டிருக்கிறது புதிய தலைமுறை ஒளிபரப்பு. அரசு கேபிள் சேவையில் இப்போது மீண்டும் தெரிகிறது புதிய தலைமுறை. இந்த சூழலில் தான், அரசு கேபிளில் புதிய தலைமுறை தெரியாதது ஏன்? என்பது குறித்து பள்ளிக் கல்வி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்தான, செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர் ராஜ்மோகன், “ஆக்கப்பூர்வமான விமர்சனம் எல்லா அரசாங்கத்திற்கும் தேவை. ஊடகம் ஜனநாயகத்தின் முக்கியத் தூண். சில இடங்களில் புதிய தலைமுறை கேபிள் அலைவரிசை பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டதாக புகாரெழுந்தது. தற்போது அந்த தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு விட்டது. என் அலுவகத்தில் கூட தற்போது புதிய தலைமுறையே ஓடுகிறது. மேலும், செய்தி வெளியிடுவதில் வேறு எதாவது பிரச்னை ஏற்பட்டால் கூட எங்களை அணுகலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Rajmohan Says Puthiya Thalaimurai Cable Issue Has Been Corrected
சிறப்பு தரிசனம் செய்ய அமைச்சரிடமே பணம் கேட்ட அர்ச்சகர்; திருச்செந்தூர் கோயிலில் பரபரப்பு
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com