விஜய் அமைச்சர் ரகுபதி pt desk
தமிழ்நாடு

”சினிமாவில் நடிக்கலாம் ஆனால், நிஜ வாழ்க்கையில் நடிக்க முடியாது” - விஜயை விமர்சித்த அமைச்சர் ரகுபதி

சினிமாவில் யார் வேண்டுமானாலும் சேற்றில் கால் வைத்து நடித்து விட முடியும். ஆனால் நிஜ வாழ்க்கையில் நடிக்க முடியாது என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்தார்.

PT WEB

செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் திமுக மாநகர கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசிய போது...

அமைச்சர் ரகுபதி

தமிழ்நாட்டில் ஜனநாயக ஆட்சி தான் நடக்கிறது:

தமிழ்நாட்டில் மன்னர் வாரிசு, மன்னராட்சி நடக்கிறதா என்றெல்லாம் கேட்கிறார்கள். தமிழ்நாட்டில் மன்னராட்சி நடக்கவில்லை, ஜனநாயக ஆட்சி தான் நடக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் தான் முதலமைச்சராக வர முடியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் அமைச்சர்களாக வர முடியும். மக்கள் யாரை நேசிக்கிறார்களோ, விரும்புகிறார்களோ அவர்களும் ஆட்சிப் பொறுப்பை ஏற்க முடியும். மக்களால் துரத்தி அடிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டியது தான்.

பொறுப்புகள் உதயநிதியை தேடிவந்தது:

அவர்கள் ஆட்சியைப் பற்றி கனவு கண்டு கொண்டு இருக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எந்த பொறுப்பையும் விரும்பி கேட்டதில்லை. அவருக்கான பொறுப்புகள் அவரின் உழைப்பால் தானாகவே வந்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் சென்று கூட்டணி வெற்றிக்காக பாடுபட்டவர் உதயநிதி ஸ்டாலின். அதுதான் அவருக்கு அமைச்சர் பொறுப்பை பெற்று தந்தது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி என்ற வரலாற்றை உருவாக்கியவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும்.

udhayanidhi stalin

மேக்கப் போட்டுக் கொண்டு வீட்டில் மட்டுமே இருக்க முடியும். உழைக்க முடியாது:

கட்சியின் மூத்த தலைவர்களின் வலியுறுத்தல், தொண்டர்களின் கட்டாயக் படுத்துதல், இவற்றுக்கெல்லாம் பணிந்து தான், உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இது எல்லாம் உழைப்பால் வந்தது, வாரிசால் வரவில்லை. இந்த உழைப்பிற்கு இணையாக இந்தியாவில் யாரையும் பார்க்க முடியாது. மேக்கப் போட்டுக் கொண்டு வீட்டில் மட்டுமே இருக்க முடியுமே தவிர யாரும் வந்து உழைக்க முடியாது. சினிமாவில் யார் வேண்டுமானாலும் சேற்றில் கால் வைத்து நடித்து விட முடியும். ஆனால் நிஜ வாழ்க்கையில் நடிக்க முடியாது.

யாரும் உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்யவில்லை:

இரவு பகல் பாராமல் மழை வெள்ளம் எது வந்தாலும் அமைச்சர்களை அனுப்பி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய உத்தரவிட்டது தமிழ்நாடு தான். இப்படி உழைத்து தான் இந்த திமுக இயக்கத்தை முன்னேற்றி இருக்கிறோம். யாரும் உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்யவில்லை. ஆனால், இன்று உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்கிறவர்கள் நம் மீது சேற்றை வாரி இறைக்க நினைக்கிறார்கள். 200 என்ற கூட்டணி எண்ணை மைனஸ் ஆக காட்டுகிறேன் என்று சொல்கிறவர்களுக்கு நாங்கள் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். நீங்கள் தோற்றுப் போவீர்கள் 200 வெற்றி பெறும்.

Public Meeting

திமுகவை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது, அடுத்த 50 ஆண்டு காலத்திற்கு திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிதான், அந்த அளவுக்கு மக்களுக்கு பணிகளை செய்துள்ளோம். அதை சொல்லி எங்களால் வாக்குகளை பெற முடியும்” என்று அமைச்சர் ரகுபதி பேசினார்.