மன்சூர் அலிகான், தவெக பரப்புரை pt web
தமிழ்நாடு

கரூர் | ”கொள்கை ரீதியா எதிர்த்து நில்லுங்க.. தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பான்” - மன்சூர் அலிகான்

கரூர் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், இரண்டு நாட்களாக தூங்கவில்லை என நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

PT WEB

தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி இருக்கிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உட்பட பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் கரூர் உயிரிழப்பு சம்பவம் குறித்து மிகுந்த காட்டமான கருத்துகளை தெரிவித்திருக்கிறார்.

மன்சூர் அலிகான்

மன்சூர் அலிகான் பேசியதாவது, “என்னுடைய சொந்த ஊர் கரூர். இரண்டு நாட்களாக நான் தூக்கம் இல்லாமல் இருக்கிறேன். எப்படி துடித்து இறந்திருப்பார்கள். நம் நாட்டில் இப்படி நடப்பது குறித்து எனக்கு வெட்கமாக இருக்கிறது. விஜயை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவரை கொள்கை ரீதியாக எதிர்க்க வேண்டும். கூட்டம் போட்டு பதில் கொடுக்க வேண்டும்.

தொடர்ந்து இந்த நாட்ட நாசாமாக்கி இருக்க உங்கள எதிர்த்து ஒருத்தர் பேசுறார். அது உங்களுக்கு பிடிக்கலன்னா கொள்கை ரீதியா எதிர்த்து நில்லுங்க... விஜய் ஏற்கனவே நடந்த பரப்புரையில் இது குறித்துப் பேசியிருக்கிறார், “நாங்க என்ன கேட்கிறோம் கூட்டம் நடத்த நல்ல இடம் தான் கேட்கிறோம்” எனப் பேசியிருக்கிறார். ஆனால், அரசியல் நோக்கத்தோடு இந்த சம்பவம் நடந்திருக்கு.

ஆறு மாதத்தில் மக்கள் யாரு வரனும்னு தேர்ந்தெடுப்பாங்க... யாரும் எதிர்க்க ஆள் இல்லாம திமிங்கலமா இருக்குறது ரொம்ப நாளைக்கு நிலைக்காது. மக்கள் ஆறு மாதத்தில் தீர்ப்பு சொல்லுவாங்க.. ஐ சப்போர்ட் விஜய். ஒட்டுமொத்த மக்கள் சப்போர்ட் விஜய்க்குதான் இருக்கு" எனக் கூறினார். தொடர்ந்து, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் குறித்தான கேள்விக்கு, “ அதெல்லாம் ஏமாற்று வேலை, கண்கட்டு வித்தை... அதால ஒன்னும் நடக்காது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “மாநாடு நடத்த எந்த கட்சிக்கும் கொடுக்காத அளவிற்கு 28 கண்டிஷன் கொடுக்குறீங்களா., அப்போ 28,000 காவல்துறை போட்டு தவெக கூட்டத்துக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கனும்ல... ஏற்கனவே, விஜய் கூட்டம் நடத்தியிருக்கிறார். லட்சக்கணக்குல கூட்டம் வருதுண்ணு தெரிது, அப்றம் ஏன் முட்டு சந்துல கூட்டம் நடத்த அனுமதி கொடுத்தீங்க... ஆனால், காவல்துறை மட்டும் என்ன செய்யும் மேலே இருக்கவங்க சொல்றத அவங்க கேக்குறாங்க” என்றார்.

கரூர்

தொடர்ந்து, விஜய் வெளியே வராமல் இருந்திருந்தால், வீட்டுக்குள்ள இருந்து அரசியல் செய்கிறார்னு சொல்லிருப்பீங்க. அவர் வெளியே வந்தால் இப்படி செய்கிறீர்கள். இப்படி இருக்கையில், யார் பாதுகாப்பில் அவர் வெளியே வருவது? என்றவர், தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பான் என்று கூறி முடித்துக்கொண்டார்.