தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் கரூர் துயர சம்பவம் வரை.. யார் இந்த அருணா ஜெகதீசன்?
கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தமிழ்நாட்டை சோகக் கடலில் ஆழ்த்தியுள்ள நிலையில் இதுகுறித்து விரிவான விசாரணையை மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டானின் உத்தரவிட்டிருந்தார்.
இந்த ஆணையம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், இந்த துயர சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியிருந்த நிலையில், நேற்று கரூர் சென்ற நீதிபதி அருணா ஜெகதீசன், நெரிசல் சம்பவம் நடந்த வேலுசாமிபுரத்தில் தனது விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
யார் இந்த அருணா ஜெகதீசன் ? அவர் வழங்கிய முக்கியத் தீர்ப்புகள் என்ன ? விரிவாகப் பார்க்கலாம்.
அருணா ஜெகதீசன்.. 2009ம் ஆண்டு முதல் 2015 ம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர். அவர் நீதிபதியாக இருந்த காலத்தில் பல்வேறு முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளார். குறிப்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்குகள் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டபோது குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கம்பெனிகளை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த அருணா ஜெகதீசன் உத்தரவிட்டார்.
அதேபோல கடந்த 2012ம் ஆண்டு வங்கி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 5 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். அது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி புகழேந்தி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இவ்வழக்கிற்கு சிபிஐ விசாரணை தேவையில்லை என அருணா ஜெகதீசன் தீர்ப்பளித்தார்.
அதேபோல, 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் 100ஆவது நாள் அன்று மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடந்த கலவரத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கவும் இதுபோன்று எதிர்காலத்தில் எந்த சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விசாரித்து அறிக்கை அளிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் 4 ஆண்டுகாலம் விசாரணை நடத்தி கடந்த 2022, மே 18-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்பித்தது. துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காவல் துறையினர் 18 பேர்களே முழு பொறுப்பு என்றும் அப்போதைய மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறை அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்து தனது அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதேபோல அம்பேத்கர் சட்டப் பல்கலை துணை வேந்தர் தேடுதல் குழுவில், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று பல்வேறு விசாரணை ஆணையங்களில் திறம்பட செயல்பட்ட அருணா ஜெகதீசனின், இந்த கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இரண்டாவது நாளாக இன்று தனது விசாரணையை மேற்கொண்டு வருகிறார். பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்கள், காவல்துறையினர், மற்றும் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.