வாக்குவாதத்தில் ஈடுபட்ட செவிலியர்
வாக்குவாதத்தில் ஈடுபட்ட செவிலியர்  file image
தமிழ்நாடு

“குழந்தையை பார்க்க சென்ற போது செவிலியர் செருப்பால் அடித்தார்”- போலீசில் பரபரப்பு புகார்!

PT WEB

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி சிந்து. நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த 19ஆம் தேதி பிரசவத்திற்காக பிரசவத்திற்காக மணமேல்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்று இரவே அவருக்குப் பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

சரவணன்

இந்தநிலையில், அந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் அமுதா என்ற செவிலியர், சரவணன் மற்றும் அவரது உறவினர்களைக் கடுமையாகப் பேசும் காட்சிகளும், அதே போல் சரவணன், செவிலியர் அமுதாவைக் கடுமையாகப் பேசும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனையடுத்து செவிலியர் அமுதா மீது சரவணன் மணமேல்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், "இன்று எனது குழந்தையைப் பார்க்க மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு பணிபுரிந்து வரும் அமுதா என்ற செவிலியர் என்னிடம் 5 ஆயிரம் ரூபாய் பிரசவம் பார்ப்பதற்காக லஞ்சமாகக் கேட்டதாகவும், அதில் தன்னிடம் இருந்த 3ஆயிரம் ரூபாயை மட்டும் கொடுத்ததாகவும் மீதி இருந்த 2000 ரூபாய் லஞ்சம் கொடுக்காததால் நீ எல்லாம் எதற்காக இங்கே வருகிறாய் என்று என்னைப் பற்றியும் எனது மனைவியைப் பற்றியும் தகாத வார்த்தையில் ஆபாசமாகப் பேசினார். அத்துடன் என்னை செருப்பால் அடித்து கழுத்தைப் பிடித்துத் தள்ளியதோடு, எனது குழந்தையை கொன்று போஸ்ட்மார்ட்டம் செய்து விடுவேன் எனவும் மிரட்டினார்” என குறிப்பிட்டுள்ளார்.

புகார் மனு

மேலும், ’காவல்துறையிடம் புகார் கொடுத்தால் உன் மனைவியையும், குழந்தையையும் அறுத்து விடுவேன்’ எனவும் பொதுமக்கள் முன்னிலையில் மிரட்டியதாகக் காவல் நிலையத்தில் சரவணன் புகார் அளித்துள்ளார்.

செவிலியர் அமுதா

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஸ்ரீபிரியா தேன்மொழியிடம் கேட்டபோது, "இந்த சம்பவம் குறித்து விசாரிக்க குடும்ப நல மருத்துவர் கோமதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சிந்து அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில் மற்றொரு குழந்தை பிறந்த பெண்ணும் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த பெண் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சிந்துவைப் பார்க்க அவரது உறவினர்கள் வந்ததால் அவர்களை வெளியே போகச் சொல்லுமாறு செவிலியர் அமுதா கூறியதால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இருந்த போதிலும் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு அதன் அடிப்படையில் தான் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும்" என்றார்.