விஜய் புதிய தலைமுறை
தமிழ்நாடு

மதுரை மாநாடு | ”தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது; தமிழ்நாட்டு மக்கள் எப்படி?” - பாஜகவை விளாசிய விஜய்!

மதுரையில் தவெகவின் 2-வது மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், பாஜகவையும் திமுகவையும் கடுமையாக விமர்சித்தார்.

Prakash J

மதுரையில் தவெகவின் 2-வது மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இதில் பேசிய தவெக தலைவர் விஜய், ஆளும் பாஜக மற்றும் திமுக அரசுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதில் அவர் பாஜக குறித்து பேசியது தொடர்பாக இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

2-வது மாநில மாநாட்டில் பேசிய விஜய்

”நாம் யாருக்கு எதிரானவர்கள் தெரியுமா? மறைமுக உறவுக்காரர்களான பாசிச பாஜகவும், பாய்ஷன் திமுகவும்தான்” என்று காட்டமாக விமர்சித்தார். தொடர்ந்து கொள்கை எதிரி பாஜக எனவும், அரசியல் எதிரி திமுக எனவும் கடும் ஆவேசத்துடன் பேசிய அவர், பிரதமர் மோடிக்கு எதிராகச் சில கேள்விகளையும் முன்வைத்தார்.

நீங்கள் ஆட்சி செய்ய வந்தது ஒட்டுமொத்த மக்களுக்கும் நல்லது செய்யவா? இல்லை, நம்முடைய இஸ்லாமிய நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் எதிராகச் சதி செய்யவா?
விஜய், த.வெ.க. தலைவர்
விஜய்

பாஜகவைத் தாக்கிப் பேசிய விஜய்

”பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களே, 3வது முறையாக ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தை நீங்கள்தானே கையில் வைத்துள்ளீர்கள்.

இல்லை, நாங்கள் தெரியாமல்தான் கேட்கிறோம். நீங்கள் ஆட்சி செய்ய வந்தது ஒட்டுமொத்த மக்களுக்கும் நல்லது செய்யவா? இல்லை, நம்முடைய இஸ்லாமிய நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் எதிராகச் சதி செய்யவா?

மக்களுக்கு உங்களிடமிருந்து கேட்க ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. அவர்களில் ஒருவனாக, அவர்கள் சார்பாக, அவர்களுடைய உண்மையான ஒரு பிரதிநிதியாக உங்களிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும் மிஸ்டர் பாரதப் பிரதமர் மோடிஜி அவர்களே” எனப் பேசிய அவர் கேள்விகளை எழுப்பினார்.

மோடியிடம் கேள்விகளை வைத்த விஜய்

மேலும் அவர், “

1.கட்சத்தீவை மீட்டுக் கொடுங்கள்:

நம் தமிழ்நாட்டு மீனவர்கள் கிட்டத்தட்ட 800 பேருக்கு மேலே இலங்கை கடற்படையால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளனர். அதைக் கண்டிப்பதற்காக உங்களைப் பெரிதாக எதுவும் செய்யச் சொல்லவில்லை. சிறிதாக ஒன்றே ஒன்றை மட்டும் செய்து கொடுங்கள். இனிமேலாவது எங்களுடைய மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக, இந்தக் கட்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்டுக் கொடுத்துவிடுங்கள். அது போதும்.

2. நீட் தேர்வே தேவையில்லை என அறிவித்துவிடுங்கள்

உங்களுடைய இந்த முரட்டுப் பிடிவாதத்தாலே, நீங்கள் நடத்தும் இந்த நீட் தேர்வால், இங்கு என்னவெல்லாம் நடக்குது எனச் சொல்வதற்கு மனது வலிக்கிறது. அதனால் இந்த நீட் தேர்வே தேவையில்லை என அறிவித்துவிடுங்கள். அது போதும். செய்வீர்களா திரு நரேந்திர மோடிஜி அவர்களே?

3. ஆர்.எஸ்.எஸ். அடிமைக் குடும்பம் என்று இன்னொரு கூட்டணி..

எங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் செய்ய மாட்டுகிறீர்கள். ஆனால், ஆட்சியதிகாரத்தை மட்டும் கையில் வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்ற நேரிடையாக ஒரு பாசிச பாஜக கூட்டணி ஒன்று. அடுத்து, இந்த மைனாரிட்டி ஆட்சியை ஓட்டுவதற்காக மறைமுகமாக ஆர்.எஸ்.எஸ். அடிமைக் குடும்பம் என்று இன்னொரு கூட்டணி.

என்னதான் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி என குட்டிக்கர்ணம் போட்டாலும் தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது. அப்படியிருக்கையில் தமிழக மக்கள் மட்டும், எப்படி ஒட்டுவார்கள்.
விஜய், த.வெ.க. தலைவர்
விஜய்

4. தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது; தமிழக மக்கள் எப்படி ஒட்டுவார்கள்

இப்படி மக்கள் சக்தியே இல்லாத இந்த ஊழல் கட்சிகளை மிரட்டி, அடிபணிய வைத்து 2029 வரைக்கும் சொகுசுப் பயணம் போகலாம் எனத் திட்டம் தீட்டி வைத்துள்ளீர்கள். அதானே ஜி? என்ன ஜி. ஒன்றுமட்டும் சொல்கிறேன். என்னதான் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி என குட்டிக்கர்ணம் போட்டாலும் தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது. அப்படியிருக்கையில் தமிழக மக்கள் மட்டும், எப்படி ஒட்டுவார்கள்.

தமிழகத்தில் ஒரு எம்பி சீட் கூட கிடைக்கவில்லை என்பதற்காக தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்காகவும் எதுவும் செய்யாமல் ஓரவஞ்சனை செய்கிறது இன்றைய ஒன்றிய பாஜக அரசு.

5. கீழடியில் கிடைத்த ஆதாரங்களை

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது இந்த மதுரை மண். அதனால், இந்தக் கீழடியில் கிடைத்த ஆதாரங்களை எல்லாம் மறைத்துவிட்டு, எங்கள் நாகரிகத்தையும் வரலாற்றையும் அழிப்பதற்காக உள்ளடி வேலை செய்யலாம் என நினைக்கிறீர்கள்.

தமிழ்நாட்டை தொட்டால்..

தமிழ்நாட்டைத் தொட்டால் என்ன நடக்கும் என்று பல உதாரணங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் இதை மறைத்துவிட்டு எங்கள் மக்களை ஏமாற்றிவிடலாம் என்று மட்டும் நினைக்காதீர்கள். மத நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற இந்த மதுரை மண்ணில் இருந்து சொல்கிறேன் உங்கள் எண்ணமெல்லாம் ஒருநாளும் ஈடேறாது” என பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்தார்.