தமிழக அரசியல் களம் சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இத்தேர்தலில், திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளிடையே நான்குமுனைப் போட்டி நிலவும் என அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இச்சூழலில் தான், கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி என்.டி.ஏ கூட்டணியின் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, திமுகவை கடுமையாக விமர்சித்த அவர், தமிழகத்திற்கான பாஜக அரசின் திட்டங்கள் குறித்துப் பேசினார். என்.டி.ஏ கூட்டணி பலம் குறைந்து இருப்பதாக பார்க்கப்பட்டு வந்த நிலையில், மோடி வருகை அக்கூட்டணிக்கு புத்துணர்ச்சி அளித்திருப்பதாக பார்க்கப்பட்டது. தொடர்ந்து, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணியை பலப்படுத்தும் வேலையிலும், தொகுதிப்பங்கீடு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் தான், பிப்ரவரி 28 ஆம் தேதி மதுரையில் என்.டி.ஏ கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெறவிருப்பதாகவும் அதில், பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதாகவும் பாஜக தரப்பில் இருந்து தெரிவிக்கபட்டிருக்கிறது. ஜனவரி இறுதியில் தமிழகம் வந்திருந்த மோடி, இந்த மாதம் மீண்டும் தமிழகம் வரவிருக்கிறார்.
மதுரை வரும் பிரதமர் மோடி முதலில் திருப்பரங்குன்றம் கோவிலில் தரிசனம் செய்யவிருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து மதுரை தோப்பூரில் 220 ஏக்கர் பரப்பளவில் 2019 ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்டு மே 22, 2024ல் கட்டுமான பணிகள் துவங்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட கட்டிடங்களை திறந்து வைக்கிறார் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது திறக்கப்படும் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் நிலையில், முதற்கட்டமாக கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களை மோடி திறந்து வைக்கவிருப்பது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான என்.டி.ஏ கூட்டணியின் தேர்தல் வியூகமாக பார்க்கப்படுகிறது. மேலும், பட்ஜெட்டில் அதிகப்படியான திட்டங்கள் இல்லை என தமிழகத்தைச் சார்ந்த எதிர்க்கட்சிகள் பாஜகவை விமர்சித்து வரும் நிலையில், பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி என்னப் பேசப் போகிறார் என்ற ஆவலையும் பிரதமர் மோடி வருகை ஏற்படுத்தியிருக்கிறது.