”அவருக்கு ஒண்ணுமே தெரியவில்லை” - விஜயை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி!
தவெக தலைவர் விஜய், அதிமுகவை விமர்சித்த நிலையில், தற்போது அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். ”அவருக்கு ஒண்ணுமே தெரியவில்லை என்றும், தவெக தலைவர் விஜய் ஒருமுறையாவது செய்தியாளர்களை வந்து பார்க்கட்டும் என்றும் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ளன. இதையடுத்து கட்சிகளில் கூட்டணி வேலைகளிலும், பிரசாரங்களிலும் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றன. இன்னொரு புறம், ஒரு கட்சியை இன்னொரு கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அந்த வகையில், தவெக தலைவர் விஜய், அதிமுகவை விமர்சிக்காத நிலையில், பனையூரில் நடைபெற்ற அக்கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவின் போது கடுமையாக விமர்சித்திருந்தார். அப்போது பேசிய அவர், “சட்டப்பேரவைத் தேர்தலில் 3 முனைப் போட்டி 4 முனைப் போட்டி எனக் கூறுகிறார்கள். அதாவது, மக்கள் சக்தியுடன் தவெக. நாம் ஒரு பக்கம். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒருபக்கம். அடுத்து, பாஜக தலைமையில் மற்றும் பலர். ஆனால், எத்தனை அணிகள் வந்தாலும், திமுகவை வீழ்த்த நம்மால் மட்டுமே முடியும். இந்த நிலையில், விஜய் வீட்டை விட்டுவிட்டு வெளியே வா என மீண்டும் மீண்டும் அழைக்கின்றபோது, ஒவ்வொரு வீட்டிலும் இருக்கக்கூடிய விஜயை கூப்பிடுவதுபோல இருக்கிறது. பொறுத்திருங்கள், தேர்தல் நாளில் வாக்காளர் அட்டையை எடுத்துக்கொண்டு எல்லோர் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு விஜயும் வருவார்கள்” எனப் பேசியிருந்தார்.
இந்த நிலையில், ’பாஜக தலைமையில் மற்றும் பலர்’ என்ற கருத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜய் பொதுவெளியில் வந்து பார்த்தால்தானே தெரியும். ஒரு சம்பவம் நடந்துபோச்சு. அதன்பின் 72 நாட்கள் வெளியே வரவே இல்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்று அவருக்கு தெரியவில்லை. எந்தெந்த கட்சிகள், எந்தெந்த கட்சியுடன் கூட்டணி என்று அவருக்கு தெரியவில்லை. எந்தக் கட்சி தேர்தலில் தலைமை தாங்குகிறது என்றும் தெரியவில்லை. அவருக்கு ஒண்ணுமே தெரியவில்லை. தவெக தலைவர் விஜய் ஒருமுறையாவது செய்தியாளர்களை வந்து பார்க்கட்டும். நிருபர்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொன்னால்தான், நாட்டில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்” என விமர்சித்தார்.

