நிரூபர்களை தாக்கிய திமுக MLA | ’தூக்கத்தில் முதல்வர்; வழக்குப்பதிவு செய்க’ - விஜய் கண்டனம்
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி திமுக MLA பழனியாண்டி, ஊடகவியலாளர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மூன்று நபர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திமுக MLA மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் கல் குவாரி நடத்தி வருகிறார். அங்கு அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும், சட்டவிரோதமாக கல்வெட்டி எடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் ஜெபாஸ்டின் ஆகியோரை கடத்தி சென்று, கண் மூடித்தானமாக, கொலைவெறி தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் சிக்கிய மூன்று நபர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில், ரத்தகாயங்களுடன், திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சம்பவ இடத்தில் அவர்களது ஒளிப்பதிவு உபகரணங்களும், உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டமன்ற திமுக உறுப்பினர், அவரது மகன் மற்றும் கூலிப்படையினர் 20க்கும் மேற்பட்டோர், நேரடியாக களத்தில் நின்று தாக்கியதாக, செய்தியாளர்கள் தரப்பில் இருந்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வீடியோ ஆதாரங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் தவெக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
தூக்கத்தில் இருக்கும் முதல்வரால் மக்கள் துயரத்தில்..
எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் தவெக தலைவர் விஜய், ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது.
குவாரி தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24X7 செய்தித் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி கொடூரமாகத் தாக்குதல் நடத்திய வீடியோ, அண்மையில் வெளியானது. அதற்குப் பிறகும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் முதல்வர் அவர்கள் இருக்கிறார் என்பது வெட்கக் கேடானது.
பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, பொதுவெளியில் இவ்வளவு மோசமாகச் செயல்படுவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாகும்.
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடே பாதுகாப்பின்றிப் பதைபதைத்து இருக்கையில், தூக்கத்தில் இருக்கும் முதல்வரால் மக்கள் துயரத்தில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆட்சியை மக்கள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறிவது உறுதி! உறுதி! உறுதி!” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

