அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதோடுமட்டுமல்லாமல், தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், “கட்சிக்குள் எந்தப் பிளவும் இல்லை. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், சின்னத்தை முடக்கும் வகையிலான நடவடிக்கைகள் இருக்கக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமியின் வாதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
தீர்ப்புக்குப் பின் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவின் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இனி தேர்தல் ஆணையம் எல்லாவற்றையும் முடிவுசெய்யும். ஆகவே, எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் என்ற பதவியையும், கட்சியின் பெயரையும் பயன்படுத்தக்கூடாது. வழக்கு விசாரணையில் இருக்கும் வரையில் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. இனி ஊரையும், உலகத்தையும் ஏமாற்ற வேண்டாம். இரட்டை இலையை முடக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. பழனிசாமி எனும் தீய சக்தியிடம் இரட்டை இலை இருக்கக்கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம்” எனத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி, “சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே சூர்யமூர்த்தியின் வழக்கில் நாங்கள் தாக்கல் செய்த மனுக்கள் விசாரிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது. ராம்குமார் ஆதித்தன் போன்றவர்கள், எங்களது மனுக்களையும் விசாரிக்க வேண்டுமென கேட்டபோது, ‘ஏற்கனவே நிலுவையில் உள்ள அனைத்து மனுக்களையும் விசாரிக்க உத்தரவு பிறப்பித்துவிட்டோம். மீண்டும் மீண்டும் மனுத்தாக்கல் செய்து ஏன் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறீர்கள்’ என உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
இதன்பின்னர் தேர்தல் ஆணையம் விசாரணைக்கான நோட்டீஸை அனைவருக்கும் அனுப்பி விசாரணையையும் தொடங்கிவிட்டது. எடப்பாடி பழனிசாமியும் விசாரணையில் பங்கெடுத்துவிட்டார். விசாரணையில் பங்கெடுத்தப்பின், அதன் முடிவு தனக்கு எதிராக இருக்கும் என் நினைத்து அதன்பின்பே எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 2017 முதல் 2024 வரை எடப்பாடி பழனிசாமி நீதிமன்றங்களிலும், தேர்தல் ஆணையத்திலும் தனக்கு சாதகமான தீர்ப்புகளையே பெற்று வந்திருக்கிறார். முதல்முறையாக அவருக்கு எதிரான தீர்ப்பு வருகிறது” எனத் தெரிவித்தார்.
மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ், “அதிமுக பொதுக்குழுவின் அக்கட்சியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு நேர்முரணாக கொள்கைகள் இருமுறை மாற்றப்பட்டுள்ளன. முதலாவது, அதிமுக பொதுச்செயலாளர் என்பவர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதை இப்போதைய தலைமை மாற்றியது. இது எம்ஜிஆரின் நோக்கத்தையே சிதைப்பது. நீதிமன்றத்தின் முன் எடப்பாடி பழனிசாமி தரப்பு சில தகவல்களை இருட்டடிப்பு செய்தது, தவறான தகவல்களைக் கொடுத்தது. எனவே, நீதிமன்றத்தின் இப்போதைய உத்தரவு சரியான உத்தரவு என்றே நினைக்கிறேன்.
தற்போதைய அதிமுக தலைமை என்பது பணத்தின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சியில் வெவ்வேறு நிலையிருப்பவர்கள் பணத்தால் சரிக்கட்டப்பட்டார்கள். இப்போதைய அதிமுக பொதுச்செயலாளராக இருப்பவர் ஜனநாயகப் பூர்வமாக தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. யாருக்கும் வாய்ப்பளிக்காமல் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டவர்” எனத் தெரிவித்தார்.