”1996 இலங்கை அணி தற்போதைய இந்தியாவை 3 நாட்களில் தோற்கடிக்கும்..” – அர்ஜுன ரணதுங்கா
2012-ம் ஆண்டிலிருந்து 12 வருடங்களாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வியே சந்திக்காமல் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, 2024-ம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-0 என தோற்று ஒயிட்வாஷை சந்தித்தது.
இந்நிலையில் சமீபத்தில் தற்போதைய இந்திய அணியை விமர்சித்து பேசியிருக்கும் முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜுன ரணதுங்கா, தற்போதைய இந்திய அணியில் இருக்கும் வீரர்களிடம் திறமையில்லை என விமர்சித்தார்.
1996 இலங்கை அணி இந்தியாவை எளிதாக வெல்லும்..
டெலிகிராப் உடன் பேசியிருக்கும் முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜுன ரணதுங்கா, தற்போதைய இந்திய அணியை தன் தலைமையிலான 1996 இலங்கை அணி 3 நாட்களில் சொந்த மண்ணில் தோற்கடிக்கும் என விமர்சித்தார்.
இந்திய அணி குறித்து பேசியிருக்கும் அவர், “1990 காலகட்டத்தில் நான் இலங்கை அணியின் கேப்டனாக இருந்தபோது, இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை பார்த்தால் கவாஸ்கர், வெங்சர்க்கார், அமர்நாத், அவர்களை தொடர்ந்து அசாரூதீன், டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி, டிராவிட் என பின்தொடர்ந்தனர். எங்களால் இரண்டு டெஸ்ட் தொடர்களில் அவர்களை தோற்கடிக்க முடியவில்லை. என்ன ஒரு தரமான வீரர்கள்.
நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். என்னை தவறாக எண்ண வேண்டாம். இப்போது இந்தியாவில் அதுபோல திறமையான வீரர்கள் இருக்கிறார்களா? நான் அதை ஏற்கவில்லை.
நான் முகத்திற்கு நேராக சொல்கிறேன், என்னுடைய 1996 அணிக்கு எதிராக தற்போதைய இந்திய அணி விளையாடினால், நாங்கள் அவர்களை இரண்டுமுறை சொந்த மண்ணில் தோற்கடிப்போம். நாங்கள் இந்தியாவில் இந்தியாவை மூன்றே நாட்களில் வீழ்த்துவோம்” என்று ரணதுங்க டெலிகிராப்பிடம் கூறினார்.
சோகம் என்னவென்றால், இந்தியாவிற்கு வந்து விளையாடிய ரணதுங்கா தலைமையிலான இலங்கை அணி ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை. மாறாக 3-0 என ஒயிட்வாஷை சந்தித்து வெளியேறியது. ஆனால் 1996 உலகக்கோப்பையில் இந்திய மண்ணில் இந்தியாவை அரையிறுதியில் தோற்கடித்தது ரணதுங்கா தலைமையிலான இலங்கை.
இதற்குபிறகு தரமான வீரர்கள் வர வாய்ப்பில்லை..
மேலும் பேசியவர், "இன்றைய இளைய தலைமுறைக்கு சரியான கிரிக்கெட்டைக் கற்றுக் கொடுக்கிறோமா? கவாஸ்கர், வெங்சர்க்கார், அமர்நாத், டெண்டுல்கர், டிராவிட் போன்றவர்களை இந்தியா உருவாக்க முடியுமா? நேர்மையாகச் சொல்லுங்கள்.
இலங்கை அணியிலும் இதே பிரச்சினை உள்ளது. தற்போதுள்ள வீரர்களுக்கு நல்ல பணம் கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் பிரான்சைஸ் கிரிக்கெட்டை விளையாடி, நாட்டிற்காக விளையாடுவதை வீரர்கள் மதிப்பிடுவதில்லை. இன்னும் ஐந்து வருடங்களில் நாட்டிற்காக விளையாடும் மதிப்பு வீரர்களிடம் போய்விடும்” என்று தற்கால கிரிக்கெட்டை விமர்சித்தார்.