‘இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்’ என்கிற தலைப்பில் திமுக தொண்டர்களுக்கு, முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாகக் கடிதம் எழுதி வருகிறார். திமுகவினர் மட்டுமல்லாது, தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலும் இந்தத் தொடர் கடிதங்கள் கவனம் பெற்றுவருகிறன. இந்நிலையில், முதல்வரின் முயற்சிகளைப் பாராட்டி தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார், திரைப்படப் பாடலாசிரியர் தாமரை. நடப்பது என்ன? விரிவாகப் பார்ப்போம்..
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், ‘காசி தமிழ்ச் சங்கமம் 3.0’ நிகழ்ச்சி, கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கியது. இந்நிகழ்வை மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கிவைத்தார். இதில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டிலிருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழுவினர் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அப்போது, தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்காதது ஏன்? என தர்மேந்திர பிரதானிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்ப,
"புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதால் ரூ. 2,152 கோடி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடம் இல்லை.. தமிழ்நாடு அரசு, இந்திய அரசமைப்புக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்” என்று அவர் பதிலளித்தார். அவரின் இந்த பதில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய கொந்தளிப்பை உண்டாக்கியது. அரசியல் தலைவர்கள் காட்டமான விமர்சனங்களை முன்வைத்தனர்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் தன் எக்ஸ் தள பக்கத்தில்,
"மும்மொழிக் கொள்கையை சட்டம் என்று ஒன்றியக் கல்வி அமைச்சர் கூறுகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது என்று கல்வி அமைச்சரால் கூற முடியுமா? மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம். ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி. அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல. மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று மிரட்டும் தொணியை தமிழர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
எங்கள் உரிமையைக் கேட்கிறோம். உங்கள் தனிச்சொத்தைக் கேட்பது போல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து பல்வேறு விவாதங்களை உண்டாக்கியது..,
தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ‘இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.. கழகத் தலைவர் உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள மடல்’ என்கிற பெயரில் கடிதங்களை எழுதி வருகிறார். கடலூரைச் சேர்ந்த சிறுமி நன்முகை 10 ஆயிரம் ரூபாய் காசோலையாக அனுப்பியது தொடங்கி, அண்ணா கேட்டதை அவரது தமிழ்நாடு கேட்கிறது என பல்வேறு விஷயங்கள் குறித்து இதுவரை ஒன்பது கடிதங்கள் எழுதியுள்ளார். திமுகவினர் தாண்டி பல்வேறு தரப்பினரின் மத்தியிலும் முதலமைச்சரின் இந்தப் பதிவுகள் கவனம் பெற்று வருகின்றன.
அந்தவகையில், தமிழ் உணர்வாளரும் பாடலாசிரியருமான கவிஞர் தாமரை, முதல்வரைப் பாராட்டி அவரின் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ளார். “சிறப்பான பதிலடிகளை உரக்கக் கொடுத்து வருகிறீர்கள் முதல்வர் அவர்களே! இந்தப் போராட்டத்தில் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்” எனத் தெரிவித்திருக்கிறார். ஒருசில விஷயங்களில் திமுகவைக் கடுமையாக விமர்சித்துவரும் தாமரை, மொழி விவகாரத்தில் முதல்வரைப் பாராட்டியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது..,