கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெஞ்சைவிட்டு அகலாத இந்த துயரச் சம்பவம் தொடர்பாக பல தரப்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் இந்த துயரச் சம்பவங்கள் தொடர்பாக இன்றுவரை விவாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கரூர் உயிரிழப்புகள் தொடர்பாகப் பல்வேறு செய்திகளும், வதந்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இதுதொடர்பாக கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விஜய் அரசியல் கட்சி தொடங்கியதிலோ அல்லது அவர் கட்சித் தொண்டர்களைச் சந்திப்பதிலோ யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவர் தொண்டர்களையும் ரசிகர்களையும் தெரிவு செய்துள்ள முறை அரசியல் முதிர்ச்சிக்கும் பொது வாழ்க்கைக்கும் தனிமனித கண்ணியத்திற்கும் உகந்ததல்ல என்பதுடன், அதுவே இந்தப் பேரழிவுக்கும் இட்டுச் சென்றுள்ளது எனச் சுட்டிக்காட்டுகிறோம். கரூருக்கும் முன்னதாக விக்கிரவாண்டி, மதுரை, திருச்சி, அரியலூர், நாகை ஆகிய இடங்களில் விஜய்யின் கூட்டங்கள் இந்தப் பேரழிவுக்கான முன்னோட்டம் போலவே நடந்திருக்கின்றன. போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்காமலும் பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையிலும் வாகனங்களில் பயணம் செய்தது, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது மற்றும் மின் கம்பங்கள், மரங்கள், அருகமைக் கட்டிடங்கள் ஆகியவற்றில் ஏறி சேதப்படுத்தியது என அவரது கட்சியினர் பொறுப்புணர்வின்றியும் கட்டுப்பாடற்றும் சுயஒழுங்கின்றியும் நடந்துகொண்டனர்.
அவர்களில் பெரும்பாலோர் முப்பது வயதுக்குட்பட்டவர்கள், புதிதாக அரசியல் ஆர்வம் கொண்டவர்கள், விஜய்யின் சொல்லுக்கு கட்டுப்படக்கூடியவர்கள். அத்துமீறல்களுக்காக அவர்களைக் கண்டித்து, நல்வழிப்படுத்த அவர் அறிவுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் விஜய் அப்படியான முயற்சியெதையும் மேற்கொள்ளாமலும் அவர்களது அத்துமீறல்களை ரசிப்பவராகவும், அவர்கள் அவ்வாறு இருப்பதுதான் தனது பலமென்று கருதியும் அவற்றை இயல்பானதாக்க முயற்சித்தன் விளைவே இந்த அநியாய மரணங்கள்.
விஜய், அறிவித்திருந்த நேர அளவுக்குள் கரூருக்கு வராமல் தன்னைக் காண்பதற்காக திரண்டிருந்தவர்களை 7 மணிநேரத்திற்கும் மேலாக காக்கவைத்ததும், அங்கு குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட அடிப்படைத்தேவைகள் போதுமானதாக இல்லாதிருந்ததும், கூட்டத்திற்குள் வந்த பிறகும் முகம் காட்டாமல் மக்களை தன் வண்டிக்குப் பின்னேயே அலையவிட்டதும்தான் உயிரிழப்புக்குக் காரணம் என்பதை காணொளிச் சான்றுகள் காட்டுகின்றன. ஆனால் இந்த உயிரிழப்புகளுக்குப் பின்னே திட்டமிட்ட சதி இருப்பதாகவும் விஜய் மீது எந்தத் தவறுமில்லையெனவும் உண்மைக்கு மாறான ஒரு கட்டுக்கதையை விஜய்யின் ஆதரவாளர்கள் சிலர் பரப்பத் தொடங்கினர்.
தன் கண்முன்னேயே விபரீதம் நடப்பதைப் பார்த்தப் பிறகும் அதில் கவனம் செலுத்தி நிலைமையைச் சீராக்காமல் அங்கிருந்து வெளியேறிப் போய் இரண்டுநாட்கள் அமைதிகாத்த விஜய், இந்தக் கட்டுக்கதை கொடுத்த தைரியத்தில் 30.9.2025 அன்று ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். தன்னால்தான் இந்தச் சாவுகள் நிகழ்ந்தன என்பது பற்றிய குற்றவுணர்ச்சியோ வருத்தமோ தார்மீகப் பொறுப்பேற்போ இல்லாத அவரது காணொளி விளக்கத்தில் அரசின் மீது பழிசுமத்திவிட்டு தப்பித்துவிடும் உள்நோக்கமே துருத்திக் கொண்டுள்ளது. கலையும் இலக்கியமும் சமூகத்தை மேம்படுத்துவதாக, விடுதலை உணர்வைத் தருவதாக, அடிமைச்சிந்தனைக்கு எதிராக தன்மதிப்புணர்வைத் தூண்டுவதாக இருக்க வேண்டும்.
ஆனால் விஜய்யின் அணுகுமுறை நேர்மைத்தன்மையற்றதாகவும், தனது ரசிகர்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதாகவும் உள்ளது. உழைப்பும், பொது சிந்தனையும், சமூக அக்கறையுமற்ற வழியில் அதிகாரத்தைப் பெறும் முனைப்பு மேலோங்கியுள்ளது. இழைத்துவிட்ட குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக, இதுவரை தனது கொள்கை எதிரி என்று குறிப்பிட்டு வந்த வலதுசாரிகளை அண்டி நிற்கவும் தயாராகிவிட்டார் என்பதை அவரது அடுத்தடுத்த நகர்வுகள் உணர்த்துகின்றன. எவ்வளவு கொடிய தீங்கினையும் இழைத்துவிட்டு வதந்திகளையும் கட்டுக்கதைகளையும் களமிறக்கி தப்பித்துவிட முடியும் என்கிற விஜய்யின் கெடுநோக்கம் தடுக்கப்பட வேண்டும். ரசிக மனப்பான்மையில் அவரது பின்னே திரண்டுள்ள சிறார்களையும் இளைஞர்களையும் மீட்டெடுத்து சமூகப் பொறுப்புணர்வும் தன்மதிப்பும் உள்ளவர்களாக, தமது உள்ளாற்றல்கள் மூலம் வியத்தகு சாதனை புரிபவர்களாக வளர்த்தெடுப்பதில் கலை இலக்கியவாதிகளுக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளதென உணர்கிறோம். விஜய்யின் முந்தைய நிகழ்வுகள், விளைவுகள் குறித்த மதிப்பீட்டின் அடிப்படையில் கரூரில் மேற்கொண்டிருக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் தமிழ்நாடு அரசு கண்டறிய வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற அவலங்கள் உருவாகாமல் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்ய, கரூர் உயிரிழப்புகளுக்கு காரணமான விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நேர்நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாதென வலியுறுத்துகிறோம்” என அதில் தெரிவித்துள்ளனர்.