புதிய தலைமுறைக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன் - திருமாவளவன்நடுநிலை இதழியலுக்கு மக்களிடையே பெயர்பெற்ற புதிய தலைமுறை தொலைக்காட்சி, அரசு கேபிளில் கடந்த வாரம் முதல் தெரியாதது குறித்து பொதுமக்கள் கேள்விகளை முன்வைக்கின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகள் உரிய பதிலைத் தராததால், அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து புதிய தலைமுறை நீக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துவருகிறது.
அரசு கேபிள் இணைப்புகளில் பெரும்பாலான இடங்களில் ‘புதிய தலைமுறை’ தெரியாத சூழல் குறித்து அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அரசு கேபிள் டிவியில் இருந்து புதிய தலைமுறை செய்தி சேனல் திமுக அரசால் முடக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. கடந்த சில நாட்களாக முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்ததாக தகவல் வரும் நிலையில், இதுகுறித்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்ததும், தற்போது சில இடங்களில் மட்டும் வருவது போல் செய்து, பல இடங்களில் தடையை தொடர்ந்து வருகிறது திமுக அரசு. ஊடகங்களில் தப்பித் தவறிக்கூட தங்களுக்கு எதிரான செய்திகள் வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறது ஸ்டாலின் அரசு” என்றும் பழனிசாமி தனது அறிக்கையில் அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறார்.
தொடர்ந்து, “அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்களுக்கு முக்கியப் பங்குண்டு என்றும், அவற்றை திருத்துவதற்கான வாய்ப்பாக கருதாமல், பழி வாங்கும் நோக்கில் இருட்டடிப்பு செய்து முடக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் கூறியுள்ளார். உடனடியாக அரசு கேபிளில் புதிய தலைமுறை சேனலின் ஒளிபரப்பு தொடரப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “அரசு கேபிள் இணைப்பில் ‘புதிய தலைமுறை’ சேனலை திமுக அரசு முடக்கியிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியளிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘தமிழ் ஜனம்’ சேனலையும் அரசு கேபிள் இணைப்பில் இடம்பெறச் செய்யாமல் தடுத்துவருவது கடும் கண்டனத்திற்குரியது. தேர்தல் நெருங்கும் வேளையில், தங்கள் ஆட்சியின் தவறுகளை வெளிப்படுத்தும் நபர்கள் மீது வழக்கு பதிந்து முடக்கப்பார்க்கும் திமுக அரசு, தற்போது ஒரு படி மேலே சென்று, தனக்கு எதிரான செய்திகள் வெளியே வரக்கூடாது எனத் தொலைக்காட்சி சேனல்களின் இணைப்பையும் முடக்கிவருவது திராவிட மாடலின் சுயரூபத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.
"சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடும்" என்று சர்வாதிகார அரசு நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது. எத்தனை திரையிட்டு மறைத்தாலும், திசைதிருப்பும் நாடகங்களை நடத்தினாலும் மக்கள் மேடையில் திமுக அரசின் அனைத்துத் தவறுகளும் பட்டியலிடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன” என்றும் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார் நயினார் நாகேந்திரன்.
அரசு கேபிள் இணைப்புகளில் பெரும்பாலான இடங்களில் ‘புதிய தலைமுறை’ தெரியாத சூழலில், இது தொடர்பாக தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்த துயர நிகழ்வில், திமுக அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்டிய புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியை, அரசு கேபிளில் இருந்து தமிழகம் முழுவதும் முடக்கியிருக்கிறது திமுக அரசு. ஊடகங்கள் திமுக அரசின் ஊதுகுழலாகச் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். “அதற்குத்தான், பொதுமக்கள் யாருமே பார்க்காத குடும்பத் தொலைக்காட்சிகளை வைத்திருக்கிறீர்களே? மக்கள் பிரச்சினைகளை, கேள்விகளை வெளிக்கொள்ளும் ஊடகங்களை ஏன் முடக்குகிறீர்கள்?.
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. முதல்வரின் சொந்தத் தொகுதியிலேயே, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழக்கின்றனர். தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் கொள்ளை போகின்றன. அரசுத் துறைகள் அனைத்தும் செயலிழந்து நிற்கின்றன” என்று பட்டியலிட்டிருக்கும் அண்ணாமலை, “இப்படி ஒரு இருண்ட சூழலில் தமிழகத்தைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டு, ஊடகங்களை முடக்கிவிட்டால் மக்களுக்கு எதுவும் தெரியாது என்ற ஐடியா எல்லாம் உங்களுக்கு யார் கொடுக்கிறார்கள் முதல்வர் அவர்களே?” என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும் அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஒளிபரப்பு கடந்த மூன்று தினங்களாக நிறுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியிருக்கும் சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம், எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி, எந்தவிதமான காரணமும் தெரிவிக்காமல் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறியிருக்கிறது.
கரூர் மாவட்டத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் ஏற்பட்ட துயரம் தொடர்பாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல முக்கியமான செய்திகளை புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்டு வருவதை சுட்டிக்காட்டியிருக்கும் சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம், இந்த வேளையில் திடீரென்று எந்தவித முன்னறிவிப்பும் இன்றி புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஒளிபரப்பை அரசு கேபிள் டிவியில் நிறுத்தி வைத்திருப்பது ஊடக உரிமையை அப்பட்டமாகப் பறிக்கும் செயல் என்று கண்டித்திருக்கிறது. தமிழ்நாடு அரசு கேபிளில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஒளிபரப்பை நிறுத்திவைத்திருப்பதை சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது என்றும் நிறுத்தப்பட்டுள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தொடர்வதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அரசு கேபிள் சேவையில் இருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சி நீக்கப்பட்டது ஊடக சுதந்திரத்திற்கு எதிரான செயல் என கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்கள் சார்ந்த பிரச்சினைகளை அணுகுவதிலும் அவற்றை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதிலும் புதிய தலைமுறை செய்தி தொடர்ந்து தனது பங்களிப்பை செய்து வருகிறது புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி என்று கூறியுள்ள கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம், அரசு கேபிள் சேவை ஒளிபரப்பிலிருந்து புதிய தலைமுறை கடந்த இரண்டு நாட்களாக நீக்கப்பட்டு இருக்கும் செயலை வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ளது.
தொலைக்காட்சியின் ஒளிபரப்பை முடக்குவதன் மூலம் உண்மைகளை முடக்கலாம் எனக் கருதுவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல என்றும், முடக்கப்பட்டுள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஒளிபரப்பை உடனடியாக துவங்கவதோடு இனிவரும் காலங்களில் இது போன்ற ஊடக சுதந்திரத்திற்கு எதிரான செயல்பாடுகளில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு கேபிள் நிறுவனம் ஈடுபடக் கூடாது என்றும் கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றம் வலியுறுத்தியிருக்கிறது.
அரசு கேபிள் இணைப்புகளில் பெரும்பாலான இடங்களில் ‘புதிய தலைமுறை’ தெரியாத சூழலில், இது தொடர்பாக தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம். அரசு கேபிள் இணைப்பில் இருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சியை நீக்கியிருப்பது கண்டனத்துக்குரியது என்றும், இதற்கான காரணத்தை அரசுத் தரப்பு உடனடியாக விளக்கமாக அளிக்க வேண்டும் என்றும் புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. வழக்கம்போல அரசு கேபிள் நிறுவன இணைப்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சியும் தடையின்றி ஒளிபரப்பாகிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தியிருக்கிறது.
அரசு கேபிள் இணைப்புகளில் பெரும்பாலான இடங்களில் ‘புதிய தலைமுறை’ தெரியாத சூழல் குறித்த கேள்விக்கு செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்த திருமாவளவன், “ஊடகங்களுக்கான ஜனநாயக உரிமைகளை பறிப்பதற்கு யாருக்கும் உடன்பாடில்லை. முதலமைச்சரின் கவனத்திற்கு இந்த விஷயம் சென்றிருக்கும் என நம்புகிறேன். உடனடியாக புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நீதி கிடைக்க அவர் உரிய நடவடிக்கைகளை எடுத்து ஜனநாயக உரிமையை காப்பார் என பெரிதும் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.