"விஜய் மேல கேஸ் போட்டாலும் நிற்காது.." - காரணங்களை அடுக்கிய அண்ணாமலை!
கரூர் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் மீது முதல் குற்றவாளியாக வழக்கு பதிவு செய்தால் வழக்கு நிற்காது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெஞ்சைவிட்டு அகலாத இந்த துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், தவெக தலைவர் விஜய் மீதும் வழக்கு பதியவேண்டும் என்ற கருத்துகள் வைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தவெக தலைவர் விஜய் மீது முதல் குற்றவாளியாக வழக்கு பதிவு செய்தால் வழக்கு நிற்காது என பேசியுள்ளார்.
விஜய் மீது வழக்கு பதிந்தால் நிற்காது..
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது விஜய் மீது வழக்கு பதிவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “கரூர் விவகாரத்தை பொருத்தவரை தவெக தலைவர் விஜய் மீது முதல் குற்றவாளியாக வழக்கு பதிவு செய்தால் வழக்கு நிற்காது. ஹைதராபாத்தில் அல்லு அர்ஜுன் வழக்கில் அப்படித்தான் நடந்தது. அரசியல் ஆசைக்காக கைது செய்யலாம், ஆனால் அடுத்தநாள் ஜாமீன் கிடைத்து வெளியில் வந்துவிடுவார்கள், இது சின்ன பிள்ளைகள் விளையாடும் விளையாட்டுக்கு சமம்.
அரசு உறுதியாக இருந்தால் யார் தவறு செய்திருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிகாரிகள் முதல் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அனுமதி வாங்கிய கீழ்மட்ட நிர்வாகிகள் வரை விசாரிக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் மீது சில தவறுகள் இருக்கிறது. சில விஷயங்கள் அவர்கள் செய்திருக்க வேண்டும். ஆனால் விஜய் அவர்களை குற்றவாளியாக மாற்ற வேண்டும் என நினைத்தால் அது முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை” என தெரிவித்தார்.
தொடர்ந்து விஜய்க்கு பாஜக ஆதரவாக இருக்கிறது என்ற விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், பாஜகவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தை, விஜயை காப்பாற்ற வேண்டிய கடமை கிடையாது. நியாயத்தை நியாயமாக பேசுகின்றோம், ஆளுங்கட்சியால் நசுக்கப்படும் பொழுது கருத்து சொல்கிறோம். தமிழக வெற்றி கழகத்தை ஆளுங்கட்சி நசுக்க பார்க்கிறது, அதற்கு கருத்து சொல்கிறோம். அதற்காக அடைக்கலம் கொடுக்கின்றோம் என்று சொல்வதெல்லாம் சரியானது அல்ல என தெரிவித்தார்.