ராஜன் pt desk
தமிழ்நாடு

சென்னை | "உயிருக்குப் போராடும் தம்பியை ஊசி ஏற்றி கொன்று விடுங்கள்" – தீக்குளித்தவரின் தங்கை வேதனை!

"உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் என் தம்பியை ஊசி ஏற்றிக் கொலை செய்து விடுங்கள். அவனை எங்களால் பார்க்க இயலவில்லை" என தீக்குளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ராஜனின் அக்கா கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெ.அன்பரசன்

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

காவல் நிலையம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட நபர்:

சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன்பு நேற்று இரவு ஒருவர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தீ உடல் முழுவதும் பரவியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதையடுத்து அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ:

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் குறித்து ஆர்.கே. நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் புளியந்தோப்பு திருவிக நகர் 7 வது தெருவைச் சேர்ந்த ராஜன் (42) என்பதும், இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளதும் தெரியவந்தது.

வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட தகராறு:

இந்நிலையில், நேற்று (20 ஆம் தேதி) ராஜனுடன் வேலைபார்த்து வந்த கொருக்குப்பேட்டை பாரதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வரும் மாதவன் (46) என்பவருடன் வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், ராஜனை, மாதவன் கையால் தாக்கியுள்ளார். இது குறித்து பட்டறை உரிமையாளர் முருகனிடம் ராஜன் தெரிவித்த நிலையில், முருகன் இருவரையும் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

மதுபான பாரில் தாக்கிக் கொண்ட சம்பவம்:

இதையடுத்து நேற்று மதியம் ராஜன், அண்ணாநகர் வேலன்சத்திரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மாதவனுக்கும் ராஜனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மாதவன், தனது நண்பரான கொருக்குப்பேட்டை ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்த பொங்கல் (எ) அருண்குமார் (26) என்பவருடன் சேர்ந்து ராஜனை தாக்கியுள்ளனர்.

இதனால், பாதிக்கப்பட்ட ராஜன், நேற்று மதியம் ஆர்கே நகர் காவல் நிலையத்திற்குச் சென்று தன்னை இருவர் தாக்கி விட்டதாக வாய் மொழியாக புகார் அளித்துள்ளார்.

புகாரை எழுதிக் கொடுக்கச் சொன்ன போலீசார் - பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட சம்பவம்:

அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் ஒருவர், ராஜனிடம் புகார் எழுதி தருமாறு சொல்லியுள்ளனர். இதனால், மதுபோதையில் இருந்த ராஜன் கோபத்தில் புகார் அளிக்காமல் புறப்பட்டுச் சென்றுள்ளார். இதையடுத்து நேற்று இரவு ஆர்கே நகர் காவல் நிலையத்திற்கு வந்த ராஜன், திடீரென தான் கொண்டு வந்திருந்த 5 லிட்டர் பெட்ரோலை உடலில் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

உயிருக்கு ஆபத்தான் நிலையில் மருத்துவமனையில் சிகிக்சை:

இதைத் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ராஜனை மீட்ட போலீசார், அவரை கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 90 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் ராஜனிடம் ஜார்ஜ் டவுன் 15 வது நீதிமன்ற நடுவர் மரண வாக்கு மூலம் பெற்றுச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஆர்கே நகர் போலீசார் வழக்குப் பதிவு மாதவன் மற்றும் அவனது நண்பர் பொங்கல் (எ) அருண்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல் நிலையத்திற்கு வெளியே ராஜனை தாக்குவதற்காக காத்திருந்த இருவர்:

இந்த நிலையில் தீக்குளித்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் ராஜனின் மைத்துனர் செய்தியாளர்களிடம் பேசிய போது... நேற்று மதியம் 3:30 மணியளவில் தனது மாமன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார். அப்போது எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்க போலீசார் சொல்லியதால் காவல் நிலையத்தை விட்டு தனது மாமன் வெளியேறியுள்ளார். அப்போது காவல் நிலையத்திற்கு வெளியே தனது மாமனை தாக்குவதற்காக இருவர் இருந்ததால்தான் தன் மாமனை இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு அழைத்து வந்தோம். அதன் பிறகு இரவு நேரத்தில் காவல் நிலையம் சென்று தீக்குளித்துள்ளார் என்று தெரிவித்தார்.

உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தம்பியை ஊசி ஏற்றி கொலை செய்து விடுங்கள்... தங்கை கதறல்:

இதனையடுத்து ராஜனின் சகோதரி தனது தம்பியை, "உடனடியாக ஊசியை ஏற்றி கொலை செய்து விடுங்கள். அவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையை தன்னால் பார்க்க இயலவில்லை" என்று கதறி அழுதார். இதைத் தொடர்ந்து ராஜனின் மனைவி விஜி நம்மிடம் பேசிய போது, "போலீசார் தனது கணவரை திட்டி அனுப்பியதால் மன உளைச்சலில் இது போன்று ஒரு முடிவை எடுத்துள்ளார். போலீசார் மட்டும் ஆறுதலாக பேசி அனுப்பி இருந்தால் எனது கணவர் எங்களை தவிக்க வைத்திருக்க மாட்டார்" என்று கதறி அழுதார்.