சென்னை: வாடகைக்கு வீடு எடுத்து, வெளிநாட்டு மதுபானம் தயாரித்த ஐவர் கைது!
செய்தியாளர்: ஆனந்தன்
சென்னை கொடுங்கையூர் கலைமகள் தெரு டீச்சர் காலனியில் பகுதியில் சென்னையை சேர்ந்த கோபி என்பவர் தலைமையில் முகமது நசீம், நயினார் முகமது, கார்த்தி, சையது அப்துல் காதர் ஆகியோர் வீடு ஒன்று எடுத்து தங்கியுள்ளனர்.
அனைவரும் இணைந்து வெளிநாடு மற்றும் பாண்டிச்சேரி, ஹரியானா மாநில மது பாட்டில்களை தயாரித்து அதற்கு போலியாக ஸ்டிக்கர் தயாரித்து, போலியாக மதுபானம் தயாரித்து விற்பனை செய்துவந்துள்ளனர். இதுதொடர்பாக மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது போலியாக உள்ள சுமார் 6,000 மதுபாட்டில்களையும், வெளிநாட்டு மதுபான அடையாளத்துடன் தயாரித்து வைக்கப்பட்டிருந்த 500 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் சம்பந்தப்பட்ட ஐந்து நபர்களையும் மத்திய நுண்ணறிவு போலீசார் மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவின் இயக்குனர் அமல்ராஜ் உத்தரவு அடிப்படையில் கைது செய்து, அண்ணா நகர் கலால் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
மேலும் சட்ட விரோதமாக மதுபானம் தயாரித்து விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்து உள்ளனர்.