மறைமுக கோரிக்கை வைத்த முதலமைச்சர்... “கண்டிப்பாக நிறைவேற்றுவேன்” என்ற எஸ்.வி.சேகர்!
நடிகர் எஸ்.வி.சேகரின் நாடகப்பிரியா குழுவின் 50-வது ஆண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கலந்து கொண்டார்.
விழாவில் நடிகர் எஸ்.வி.சேகர் பேசுகையில், “தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் கலைமாமணி விருது பெரும் நபர்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டுமென்று ஏற்கனவே நான் வைத்த கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றி இருந்தார். 60 வயதை கடந்தவர்கள் தங்களது துணையுடன் செல்வதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இப்படி அவரிடம் நான் வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
அதே நேரத்தில் எனது தந்தையாரின் நினைவை போற்றும் வகையில் நான் வசிக்கும் மந்தைவெளியில் உள்ள ஐந்தாவது டிரஸ்ட் கிராஸ் தெருவுக்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக வைக்கிறேன்” என தெரிவித்தார். அதே நேரத்தில் “எனக்குத் தெரிந்து வலிக்காத சவுக்கு கோயம்புத்தூரில் மட்டும்தான் தயார் செய்யப்படுகிறது. நான் அரசியலை பேசக்கூடாது என இருக்கிறேன். தமிழகத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாட வேண்டும். அதற்கு பிறகு தேசிய கீதம் பாட வேண்டும்” என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எஸ்.வி.சேகர் நாடகப் பிரியா நாடகக்குழுவின் 50-வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எஸ்.வி.சேகரின் தந்தையை பற்றி அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாடகத்தில் கொடி கட்டி பறந்தவர். தமிழகத்தில் முதல் தொலைக்காட்சி தொடர் வண்ண கோலங்களை தயாரித்தவர் எஸ்.வி.வெங்கட்ராமன். இப்படி நீண்ட பட்டியலை பற்றி சொல்ல முடியும். அவரது நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறோம்.
என்னை ஒரு மாதத்திற்கு முன்பு அண்ணா அறிவாலயத்தில் வந்து சந்தித்து கோரிக்கை வைத்தார் (எஸ்.வி.சேகர்). இல்லை உத்தரவிட்டார்... இந்த நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார். அப்போது நான் சொன்னேன். முதல்வராக நான் பொறுப்பேற்ற பிறகு இப்படிபட்ட நாடக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என சொன்னேன். ஆனால் அவர் கண்டிப்பாக வர வேண்டும் என்று உத்தரவிட்டார். மகிழ்ச்சியுடன் வந்தேன்.
எஸ்.வி.சேகர் எந்த கட்சியில் இருந்தாலும் சரி... இப்போது எந்த கட்சி என தெரியவில்லை... நம்ம கட்சி... (நிகழ்விடத்தில் சிரிப்பலை எழுந்தது) முத்தமிழ் அறிஞர் கலைஞரை அழைத்து நாடகம் நடத்திய அவர். இன்று 7,000 ஆவது நாடகத்துக்கு கலைஞர் மகனை அழைத்து வந்துள்ளார். அவர் எங்கள் குடும்பம், அரசியல் இல்லை; கலை குடும்பம். எஸ்.வி.சேகர் மீது கலைஞருக்கு பாசம், பற்று அதிகம் உண்டு.
எந்த கட்சியில் இருந்தாலும் துணிச்சலாக பேசக்கூடியவர். 2026 எஸ்.வி.சேகரை பயன்படுத்தி கொண்டால் போதும். எஸ்.வி.சேகர் எல்லாரையும் சிரிக்க வைக்க கூடியவர். மயிலாப்பூரில் எஸ்.வி.சேகர் வசிக்கும் தெருவுக்கு அவரது தந்தை பெயர் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உடனடியாக வைக்கப்படும். நீங்கள் வைத்த கோரிக்கையை நான் நிறைவேற்றி விட்டேன். நான் வைத்த கோரிக்கையை நிறைவேற்றுங்கள் (தேர்தலுக்கு எஸ்வி சேகரை பயன்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் மறைமுக பேச்சு)” என்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.வி.சேகர் பேசுகையில், “இன்றைய காலகட்டத்திலும் மாதத்திற்கு இரண்டு நாடகம் போடுகிறோம். முதலமைச்சர் எனது சில கோரிக்கைகளை நிறைவேற்றினால் அவருக்காக நிச்சயமாக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வேன். உதாரணமாக 3 பிராமணர்களுக்கு எம்.எல்.ஏ பதவி, அந்தணர் நல வாரியம் போன்றவை அமைக்கப்பட வேண்டும் போன்றவை. இதலாம் நடந்தால் திமுக-விற்கு பிரசாரம் செய்வேன்.
அதேநேரம் எனக்கு 75 வயதாகிவிட்டது என்பதால் நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். இருப்பினும் எனது மகன் திமுகவில் விருப்பம் இருந்தால் இணையலாம். தேர்தலிலும் போட்டியிடலாம். ஆனால், நேர்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.
நடிகர் விஜய் இன்னும் முழுமையாக அரசியலுக்கு வரவில்லை. சினிமா படப்பிடிப்பு போன்று அங்கங்கே குரூப் குரூப்பாக சென்று பேசுகிறார். 234 சட்டமன்ற தொகுதிகளிலும் அவர் போட்டியிடப் போகிறார் என்றால் புஸ்ஸி ஆனந்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒண்ணும் செய்ய முடியாது. தற்போதைய அரசியல் சூழல் அப்படியே நீடித்தால் திமுக நிச்சயமாக ஆட்சி அமைக்கும்” என தெரிவித்தார்.