செய்தியாளர் மனோஜ்கண்ணா
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளிலுள்ள விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களிடமிருந்து சிறுநீரகத்தை 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரகங்கள் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் மருத்துவ இணை இயக்குனர் ராஜ்மோகன் தலைமையிலான குழுவினர் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை மற்றும் சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தங்கள் விசாரணையை துவங்கினர். விசாரணையில், ஆலாம்பாளையம் பேரூர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் கிட்னி விற்பனை செய்யும் புரோக்கராக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. ஆனால், அவரது வீடு பூட்டி இருந்த நிலையில் அவரது இல்லத்திற்கு அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையே, பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை சார்பில் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில், கிட்னி விற்பனைக்கான இடைத்தரகராக செயல்பட்ட ஆனந்தனை பிடித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வீரமணி புகார் கொடுத்துள்ளார். ஆனந்தன் பள்ளிபாளையம் ஒன்றிய திமுகவில் ஆலாம்பாளையம் பேரூர் கழக பேச்சாளராக பொறுப்பு வகித்து வந்ததும் அவ்வப்போது கட்சி நிகழ்வுகளிலும் பங்கேற்று வந்துள்ளார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கிட்னி திருட்டு புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் விசாரணை அறிக்கை கிடைக்க பெற்றவுடன் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஓராண்டுக்கு முன்னர் இதே பிரச்சனை எழுந்தது; மீண்டும் தற்போது கிட்னி திருடு புகார் வந்துள்ளது.
ஏற்கெனவே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை என்பதே இல்லை என்ற சூழல் உள்ளது. அடுத்த ஆண்டு நிரப்பப்பட வேண்டிய மருத்துவ பணியாளர்கள் தற்போது பணி அமர்த்த பட்டுள்ளனர். PG முடித்தவர்கள் பணியமர்த்தபடும் பணிகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட நபர்கள் நேரடியாக புகார் கொடுக்காத வரை நடவடிக்கைகள் மேற்கொள்வதில் காவல்துறை மெத்தனமாக செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் விற்பனைக்காக அதிகப்படியாக வறுமையில் உள்ள பெண்களின் கிட்னிகளை மட்டுமே குறி வைப்பதாகவும் இந்த கும்பலை கண்டறிந்து காவல்துறை உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வறுமையில் உழைக்கும் ஏழை தொழிலாளர்களைக் குறிவைத்து இத்தகைய சம்பவங்கள் நடந்து வந்தது. காவல்துறையினரின் நடவடிக்கைக்குப் பின் சில ஆண்டுகள் இதுபோன்ற நடவடிக்கைகள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் அதுபோன்ற நிகழ்வுகள் நடந்து வருவதாக செய்திகள் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.