கரூரில் நேற்று நடைப்பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கரூருக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும் தெரிவித்து வருகின்றனர். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. நேற்றிரவு செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட, அருணா ஜெகதீசன் ஆணையம் கொடுக்கும் அறிக்கையின்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், விசாரணை ஆணையம் விரைவில் விசாரணையைத் தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நீதியரசர் அருணா ஜெகதீசன் தனது விசாரணையைத் தொடங்கியிருக்கிறார். குறிப்பாக சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில், விஜய் பரப்புரை மேற்கொண்ட இடத்தில் அருணா ஜெகதீசன் விசாரணை மேற்கொண்டார். கடைக்கு முன் சேதடைந்து இருக்கும் மேற்கூரைகளை பார்வையிட்ட அவர், ஒரே இடத்தில் மட்டும் 17 நிமிடங்கள் ஆய்வு செய்து காவல் அதிகாரிகளிடம், பொது மக்களிடமும் நடந்த நிகழ்வுகளை உன்னிப்பாக கேட்டறிந்தார். அதே பகுதியின் எதிர் சாலைக்கு நடந்து சென்று கழிவு நீர் கால்வாய் பகுதியை பார்வையிட்ட அவர் தொண்டர்கள் அமர்த்திருந்த மரங்களையும் பார்த்தார். வேலுசாமி புரத்தில் 21 நிமிடம் ஆய்வு செய்த பின் அங்கிருந்து சென்றார்.
விஜய் பரப்புரை நடந்த இடம், கரூர் ரவுண்டனா, விஜய் பரப்புரை வாகனம் வந்த வழித்தடங்கள் போன்ற பகுதிகள் எம்மாதிரியான சம்பவங்கள் நடந்தன என்பது குறித்தான விபரங்களை எல்லாம் அருணா ஜெகதீசன் சேகரிக்க இருக்கிறார். தனது விசாரணையை முடித்தபின் தமிழக அரசுக்கு விரிவான ஒரு அறிக்கையையும் கொடுக்க இருக்கிறார். அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.