கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் இயங்கிவரும் கல்குவாரி விதிகளுக்குப் புறம்பாக செயல்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அதுகுறித்து ஆய்வு செய்ய தனியார் தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றின் திருச்சி மாவட்ட செய்தியாளர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டியன் ஆகியோர் ஐயர் மலைப் பகுதிக்குச் சென்றுள்ளனர். குவாரிக்கு அருகே ட்ரோன் கேமராவைப் பயன்படுத்திப் படம் பிடித்ததற்கு அங்கு பணியாற்றும் ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்கள் தங்களை தாக்கியதாகவும் செய்தியாளர்கள் புகார் கூறியுள்ளனர்.
அந்த குவாரி ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி தரப்புக்கு சொந்தமானது என்றும், எனவே குவாரி ஊழியர்களுடன் சேர்ந்து, எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்களும் தங்களைத் தாக்கியதாகவும், அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் சென்ற வழக்கறிஞர் திருமலைராஜனும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருச்சி எஸ்பி ஜோஸ் தங்கையா உத்தரவின்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் செய்திக் குழுவினரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
செய்தியாளர்கள் மீதான தாக்குதலுக்கு பத்திரிகையாளர் சங்கங்களும், டி.டி.வி. தினகரன், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தின்போது, செய்தியாளர்கள் தரப்பு தங்களை தாக்கியதாக குவாரி ஊழியர்களும் காவல்துறையில் புகாரளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இரு தரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டுவருவதாக திருச்சி காவல்துறை தெரிவித்துள்ளது.