ஏர்போர்ட் மூர்த்தி மீதான குண்டர் சட்டம் ரத்து.. உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்.!
புரட்சித் தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் இடையே கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் அருகே கைகலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம், தொடர்பாக மெரினா காவல் நிலையத்தில் இருதரப்பிலும் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஏர்போர்ட் மூர்த்தி, கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் போடப்பட்டது.
இந்த நிலையில் தான், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மனைவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் பி. வேல்முருகன், ஜோதிராமன் அமர்வு முன் விசாரணக்கு வந்தது. அப்போது, ஏர்போர்ட் மூர்த்தி தரப்பு வழக்கறிஞர், அரசியல் காரணங்களுக்காகவே குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டிருப்பதாக வாதிட்டார். தொடர்ந்து, இந்த வழக்கில் விசாரணை நடத்திய நீதிபதிகள் ஏர்போர்ட் மூர்த்தி மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இதனையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஏர்போர்ட் மூர்த்தி இன்று விடுவிக்கப்பட்டார். அப்போது, சிறை வாயிலில் நடிகை கஸ்தூரி உட்பட பலர் காத்திருந்து, சிறையில் இருந்து வெளியே வந்த புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்திக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
