மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ராஜ்யசபா எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலான நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலக்தில் நடைபெற்றது.
முன்னதாக கட்சி அலுவலகம் வந்த கமல்ஹாசனுக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வர்வேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து கட்சியின் 2026 தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துவது குறித்து முக்கிய நிர்வாகிகளை சந்தித்து கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். பின்னர், கமல்ஹாசனை நேரில் சந்தித்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது ஒரு தொண்டர் வாளை பரிசாக கொடுக்க வந்த நிலையில் கமல்ஹாசன் கடும் கோபமடைந்தார். ‘வாழ்த்துகூற வருபவர்கள் புத்தகங்களை மட்டும் கொண்டுவரவேண்டும்’ என ஏற்கனவே கட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால், ஒரு தொண்டர் திடீரென்று வாளை கையில் எடுத்து கமல்ஹாசன் கையில் கொடுக்க முயன்றார். அனைவரும் பதற்றமடைந்து வாளை பிடுங்க முயன்றனர். அப்போது கோபமடைந்த கமல்ஹாசன், “வாளை கையில் பிடிக்க கூடாது அதை கீழே வை” என்று கோபமாக கூறினார். தொடர்ந்து போலிசார் அந்த தொண்டரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், பேச்சை நிறுத்தி விட்டு செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று நிர்வாகிகளை அறிவுறுத்தி உள்ளேன் என்று கூறினார்.