கிருஷ்ணா ஜெயசங்கர்
கிருஷ்ணா ஜெயசங்கர்pt web

சென்னை to அமெரிக்கா... தடகளத்தில் சாதனைப் பெண்... யார் இந்த கிருஷ்ணா ஜெயசங்கர்?

சாதிக்க வேண்டுமென்ற வெறி இருந்து சரியான நேரத்தில் ஒரு ஆசானைக் கண்டடைந்து கொண்டீர்கள் என்றால், நீங்கள் வெற்றியடைவதை யாராலும் தடுக்க முடியாது..
Published on

விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை

வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்

என்றான் பாரதி..

மகாகவி பாரதியார்
மகாகவி பாரதியார்கோப்புப்படம்

பெண்கள் குறித்த பாரதியின் கனவு மிகப்பெரியது...

சாத்தி ரங்கள் பலபல கற்பராம்;

சவுரி யங்கள் பலபல செய்வராம்;

மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்;

மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;

காத்து மானிடர் செய்கை யனைத்தையும்

கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;

ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;

இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ!

என்று பாடினான்..

பாரதியின் சொற்கள் உருவெடுத்து வந்ததுபோல் அமெரிக்க மண்ணில் சாதித்துக்கொண்டு இருக்கிறார் தமிழ்நாட்டு மாணவி ஒருவர்...

NCAA

அமெரிக்காவின் National Collegiate Athletic Association. அதாவது தேசிய கல்லூரி தடகள சங்கம்.. சுருக்கமாக NCAA. இந்த NCAA என்பது கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தடகளப் போட்டிகளை ஊக்குவிக்கும் ஒரு லாபநோக்கற்ற அமைப்பாகும். இதன் முதன்மையான நோக்கம் நாடு முழுவதிலும் தடகளப் போட்டிகளில் ஆர்வமிருக்கும் மாணவ மாணவிகளை ஊக்குவிப்பது மற்றும் அவர்களது திறமையை தேசிய அளவில் கவனம் பெறச்செய்வது.

இந்த அமைப்பு நடத்தும் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகளில் பங்கேற்பது என்பது அத்தனை சாதாரணமான விஷயம் அல்ல.. அமெரிக்கா முழுவதிலுமிருந்து கிட்டத்தட்ட 1100 பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் போட்டியிடுவார்கள். அவர்கள் எல்லோரையும் கடந்து சென்று ‘பெண்கள்’ வட்டு எறிதலில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறார் தமிழ்நாட்டின் சிங்கப்பெண் கிருஷ்ணா ஜெயசங்கர்..

லாஸ் வேகாஸிலுள்ள நெவாடா பல்கலைக்கழகத்தில் பயிலும் கிருஷ்ணா ஜெயசங்கர் NCAA டிராக் அண்ட் ஃபீல்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்தியப் பெண்மணி.. NCAAவில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளாக அதிகரித்து வந்தாலும் இறுதிப்போட்டி வரை செல்லும் வீரர்கள் மிகக்குறைவு.. அதிலும் முதல் இந்தியப் பெண்ணாக, ஒட்டுமொத்த அமெரிக்க அளவில் - வட்டு எறிதலில் 12 ஆம் இடம்பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறார் கிருஷ்ணா ஜெயசங்கர்.. வரும் 14ஆம் தேதி யூஜினில் நடைபெறும் இறுதிப்போட்டியில் சாதிக்கக் காத்திருக்கிறார்.

சிறுவயதிலிருந்தே விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம்

கிருஷ்ணா ஜெயசங்கரின் பெற்றோர் ஜெயசங்கர் மேனன் - பிரசன்னா.. எங்கேயோ கேள்விப்பட்டதுபோல் இருக்கிறதா? ஆம், இவர்களிருவரும் இந்திய தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு கேப்டன்களாக செயல்பட்டவர்கள்... விளையாட்டு தனது மரபணுவிலேயே கலந்திருப்பதாலோ என்னவோ சிறுவயதிலிருந்தே கிருஷ்ணாவிற்கும் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமிருந்திருக்கிறது. டென்னிஸ், பேட்மிட்டன், நீச்சல், கூடைப்பந்து என பல விளையாட்டுகளில் கவனம் செலுத்தியிருக்கிறார்.. தற்போதோ வட்டு எறிதலில் கொடி நாட்டி வருகிறார்.,

புதிய தலைமுறையுடனான நேர்காணலின்போது..
புதிய தலைமுறையுடனான நேர்காணலின்போது..

வட்டு எறிதல் போட்டியை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்களா அல்லது போட்டி உங்களைத் தேர்ந்தெடுத்ததா என்று கேட்டால், அதன் பின்னிருக்கும் விஷயங்களைச் சொல்கிறார் கிருஷ்ணா. அவர் கூறுகையில், “நான் பிறந்து வளர்ந்தது சென்னையில்தான். ஐந்தாம் வகுப்பு படிக்குபோது எனது உடற்கல்வி ஆசிரியர்தான் குண்டு எறிதலில் கவனம் செலுத்தச் சொன்னார். அதற்கு முன் இந்தப் போட்டிகளைப் பற்றி எனக்குத் தெரியாது... உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் இந்த விளையாட்டுதான் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளது” என்கிறார்..

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து அமெரிக்கா வரை அவர் மேற்கொண்ட பயணம் மிகவும் புரட்சிகரமானது. பொதுவாக கேலிக்கு உள்ளாகாத ஆட்களே உலகத்தில் இருக்க முடியாது. சாதனையாளர்களின் எந்த வரலாற்றை நீங்கள் எடுத்தாலும், கேலிகளும் கிண்டல்களுமே அவர்களது மனதை இரும்பென மாற்றியிருக்கும். கிருஷ்ணாவும் கேலிக்கு உட்படுத்தப்பட்டார். விளைவு விளையாட்டில் அதிக கவனம் சென்றது. கவனம் காதலாகி Track and fieldல் கோப்பைகளை அறுவடை செய்து கொடுத்தது.

அமெரிக்காவுக்கான ரூட்

தடகள வீரராக தன்னை மேலும் மெருகூட்டிக்கொள்ள குண்டூரில் உள்ள டென்விக் அகாடமியில் சேர்ந்தார் கிருஷ்ணா. டென்விக் என்பது கிரிக்கெட் ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் விளையாட்டு அகாடமி. அங்குதான் வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற எறிதல் விளையாட்டுகளின் பயிற்சியாளர் மைக்கேல் வாசலைச (Michael Vassell) சந்தித்திருக்கிறார். அதுவரை குண்டு எறிதலில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த கிருஷ்ணாவை வட்டு எறிதல் நோக்கித் திருப்பியவர் வாசல். அதுமட்டுமின்றி NCAA குறித்து சொல்லி அது தொடர்பான ஆசையைத் தூண்டியவர். அது தொடர்பாக மிக உணர்ச்சிகரமாக பேசுகிறார் கிருஷ்ணா..

Michael Vassell
Michael Vassell

அவர் கூறுகையில், “பயிற்சியாளர் வாசல்தான் எனக்கு NCAA குறித்து சொல்லிக்கொடுத்தார். மைக்கேல் வாசல் பயிற்சியாளராக 35 ஆண்டுகள் செயல்பட்டிருக்கிறார். ஜமைக்காவில் இருந்து அதிகமான மாணவர்களை அனுப்பியிருக்கிறார். NCAAவிற்கு அனுப்பியிருக்கிறார். நான் சென்னைப்பெண். அதிகபட்சமாக வட இந்தியாவரையாவது சென்றுவிட வேண்டுமென்றுதான் நினைப்போம். ஆனால், அமெரிக்கா வரை போகும் என் கனவை நிறைவேற்றி வைத்தது அவர்தான்” எனத் தெரிவிக்கிறார். கனா திரைப்படத்தில் ஒரு வசனம் உண்டு.. ‘ஒரு விஷயம் வேணும்னா ஆசப்பட்டா மட்டும் பத்தாது.. அடம்பிடிக்க தெரியனும்’ என்று இதை தன் வாழ்விலும் நிகழ்த்தியிருக்கிறார் கிருஷ்ணா ஜெயசங்கர்.. குண்டூரில் பயிற்சி பெறுவதற்கே யோசித்த பெற்றோர் ஜமைக்கா, அமெரிக்கா என்றால் அத்துனை எளிதாக ஒப்புக்கொள்வார்களா என்ன? கிருஷ்ணாவின் உறுதி இந்தியாவிலிருந்து பறப்பதை உறுதி செய்தது.

காயங்கள் தவிர்க்க முடியாதது

ஜமைக்காவில் கிருஷ்ணா தேசிய அளவிலான பல போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கிங்ஸ்டனில் நடந்த ஒலிம்பிக் டெஸ்டினி சீரிஸ்3ல் மிகச் சிறப்பாக செயல்பட்டார். இது அவரை அமெரிக்கா வரைக் கொண்டு சென்றது.

விளையாட்டில் காயங்கள் தவிர்க்க முடியாதது. காயத்தினால் கிருஷ்ணாவிற்கு சில போட்டிகளில் போட்டியிட முடியாத சூழலும் உண்டானது. தனது காயங்கள் குறித்து கூறும் கிருஷ்ணா, “எனக்கு இப்போதும் காயமிருக்கிறது. ஒன்றரை வருடங்களாக காயத்தினால் மிகவும் அவதிப்படுகிறேன். இங்கு யாரும் இல்லாததால் தனியாகத்தான் போராட வேண்டியிருக்கிறது. ஆனால், சென்னை, தமிழ்நாடு, இந்தியா என பிரதிநிதிதுவப்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” எனத் தெரிவிக்கிறார். சில மோசமான காலக்கட்டங்கள் நம்மை யாரென்று வரையறுக்காது எனத் தெரிவிக்கும் கிருஷ்ணா அந்த மோசமான பருவங்கள் தன்னை வளர்த்துக்கொள்ளவும், தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளவும் உதவும் என்கிறார்.

காலம் எல்லாவற்றையும் மாற்றும் என்பார்களே.. கிருஷ்ணாவிற்குண்டான காலமும் வந்தது. தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற ஆரம்பித்தார். கடந்த மே 31 ஆம் தேதியன்று டெக்ஸாஸில் நாடந்த வெஸ்டர்ன் கான்பரன்ஸ் வட்டு எறிதலில் 55.61 மீட்டர் பதிவு செய்து 26 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். பயிற்சிகளின்போது இவ்வளவு தூரத்தை எட்டுவேன் என கனவிலும் நினைத்ததில்லை எனத் தெரிவிக்கும் கிருஷ்ணா இவ்வளவு தூரத்தினைக் கடக்க நான் மிகவும் கஷ்டப்பட்டுள்ளேன் எனத் தெரிவிக்கிறார்.

சாதிக்க வேண்டுமென்ற வெறி

இந்தியாவின் விளையாட்டு கட்டமைப்பிற்கும் அமெரிக்காவின் விளையாட்டு கட்டமைப்பிற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால், எறிதல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு போதிய வசதிகள் இல்லை எனத் தெரிவிக்கிறார் வருத்தத்துடன். “நான் இந்தியாவிலிருந்து கிளம்பும்போது எனக்கு வட்டு எறிந்தோ அல்லது குண்டு எறிந்தோ பயிற்சி பெற போதிய இடம் கிடைக்கவில்லை. அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஓட்டப்பந்த வீரர்களுக்கு இருக்கும் களங்களைப்போல் ஏறிதல் விளையாட்டுகளில் ஈடுபவர்களுக்கு போதிய வசதிகள் இல்லை. குறிப்பாக அமெரிக்காவில் எல்லாப் போட்டிகளுக்கும் ஒரே மாதிரியான முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதிமுக்கியமாக போட்டிபோடும் திறன் மிக அதிகம்” எனத் தெரிவித்தார்.

சாதிக்க வேண்டுமென்ற வெறி இருந்து சரியான நேரத்தில் ஒரு ஆசானைக் கண்டடைந்து கொண்டீர்கள் என்றால், நீங்கள் வெற்றியடைவதை யாராலும் தடுக்க முடியாது.. சாதிக்க வேண்டுமென்ற கிருஷ்ணாவிற்கு இருந்த ஆர்வம் அவரை சரியான பயிற்சியாளரை நோக்கி இட்டுச் சென்றது. தொடர்ச்சியான அர்ப்பணிப்பு அவரை NCAA இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றுள்ளது. காதலுக்காகத்தான் அமெரிக்கா செல்ல வேண்டுமா என்ன? சாதனைக்காகவும், வெற்றிக்காகவும் அமெரிக்கா செல்லலாம். ஆணாக இருந்தால் என்ன? பெண்ணாக இருந்தால் என்ன? யாராக இருந்தாலும் முடியும் என்பதற்கு உதாரணம் கிருஷ்ணா ஜெயசங்கர்... வாழ்த்துகள் கிருஷ்ணா.. நீங்கள் சாதிப்பீர்கள்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com