செய்தியாளர் ஹாஜிரா பானு
திமுக ஆட்சி காலத்தில் காவல் மரணங்களால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களிடமும் முதல்வர் மன்னிப்பு கோர வேண்டுமென தவெக தலைவர் வலியுறுத்தினார். இந்நிலையில், அஜித்குமார் காவல் மரண விவகாரத்தில் மட்டும் விஜய் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன என திமுக ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்...
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான சமூக நீதி அரசுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டுமென தவெக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திமுக ஆட்சியில் காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய தவெக தலைவர் விஜய், "காவல் மரணத்தால் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திடம் மட்டும் முதல்வர் மன்னிப்பு கோரினால் போதாது. திமுக ஆட்சியில் ஏற்பட்ட காவல் மரணங்களால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடமும் மன்னிப்பு கோர வேண்டுமென வலியுறுத்தினார்".
திராவிட மாடல் அரசு சாரி மா மாடல் சர்க்காராக மாறியதாகவும் விஜய் விமர்சித்திருந்தார். தனது இயலாமைகளுக்குப் பரிகாரமாக சட்டம் ஒழுங்கை திமுக அரசு சரிசெய்தே ஆக வேண்டுமென வலியுறுத்திய விஜய், சரிசெய்யவில்லை எனில் மக்களோடு மக்களாக ஒன்றாக நின்று போராட்டம் நடத்தி சட்டம் ஒழுங்கை சரிசெய்ய வைப்போம் என எச்சரித்தார்.
இந்நிலையில், தவெக தொடங்கியது முதல் தற்போது வரை நடந்த காவல் மரணங்கள் எதற்கும் வாய் திறக்காமல், முதல்வர் மன்னிப்பு கோரிய பிரச்சினையை மட்டும் விஜய் கிளறுவதாக திமுக ஆதரவாளர்கள் விமர்சித்துள்ளனர். விஜயின் இந்த அணுகுமுறை மற்றும் திமுகவினர் எழுப்பிய கேள்வி குறித்து பத்திரிகையாளர் ஷபீர் அகமதுவிடம் பேசினோம். அப்போது,
"காவல் மரணம் தொடர்பான வழக்கில் ஒரு மாநிலத்தின் முதல்வர் மன்னிப்பு கேட்கிறார் என்றால் அது மாநில அரசின் பெரிய தோல்வியைதான் காட்டுகிறது. இனியும் இதுபோன்ற சம்பவங்கள் தொடரக்கூடாது என்பதற்காக அரசு என்ன செய்கிறது?. மன்னிப்பு கோரியதால் மட்டுமே இந்த பிரச்சினை முடிவுக்கு வந்துவிடுமா என்றால் கிடையாது. இதில் யார் சம்பந்தப்பட்டுள்ளார்களோ அவர்கள் மீது வழக்கு நடத்தி அவர்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கி கொடுப்பது, அரசின் பொறுப்பாக உள்ளது".
"திமுக, அதிமுக என எல்லோர் ஆட்சி காலத்திலும் காவல்துறை உள்ளது. எனில், இங்கு நடைமுறை சார்ந்து ஒரு சிக்கல் உள்ளது என்பதுதான் முக்கியமான விஷயம். அதை அடையாளப்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது. அதை சீரமைக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?. ஒன்றும் பெரிதாக நடவடிக்கை எடுத்ததுபோல தெரியவில்லை. மன்னிப்பை ஒரு தீர்வாக எடுத்துக் கொள்ள முடியாது. இனியும் ஒரு சம்பவம் நடக்க கூடாது என்பதற்காக இந்த அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்ற விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன. அந்த இடத்தை நோக்கி அரசாங்கத்தை நகர்த்த எதிர்க்கட்சிகளின் அழுத்தம் தேவை".
"நீதிமன்ற, போலீஸ் காவலில் 24 பேர் இறந்துள்ளனர் என்பது வெறும் எண்ணிக்கை அல்ல. ஒவ்வொன்றும் உயிர்கள். எனில் அந்த ஒவ்வொரு வழக்கிலும் மனித உரிமை மீறல் நடந்துள்ளது. அந்த ஒட்டுமொத்த விஷயத்துக்கும் விஜய் ஒரு வெளிச்சத்தை பாய்ச்சி இருக்கிறார். காவல் மரணங்கள் என்பது போலீஸ் நிலையங்களில் நடக்கக்கூடிய வன்முறை. அது ஒரு பெரிய பிரச்சனை. இது போன்ற சம்பவம் நடக்கும் போது, அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவிப்பார்கள். அதை பற்றி பேசுவார்கள். விசாரணை கோருவார்கள். அப்படியான சூழலில், ஒட்டுமொத்தமாக இதை ஒரு பிரச்சினையாக விஜய் மேற்கோள்காட்டி இருக்கிறார். அரசியல் கட்சி துவங்கியது முதல் தனது முதல் போராட்டமாக இந்த விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார். இதற்கு முன் வேறு எந்த அரசியல் கட்சி 24 குடும்பங்களையும் ஒன்றிணைத்து, அவர்களை ஒரு மேடையில் கொண்டு வந்து, ஒரு போராட்டமாக முன்னெடுத்து இருக்கிறார்கள்?. யாருமே செய்யவில்லை".
"விஜய் மக்கள் மத்தியில் போராட்டம் நடத்தி, பிரச்சனையை நோக்கி மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளார். விஜய் ஏன் மற்ற காவல் நிலைய மரணங்களுக்கு பேசவில்லை என்று கேட்பதே தவறு. சென்னையில் நடந்த விக்னேஷ் வழக்கில் எட்டு காவலர்கள் கைது செய்யப்பட்டனர். அதை மீறி இன்னொரு சம்பவம் நடந்திருக்கிறது. எனில் காவல் துறைக்கு அது ஒரு எச்சரிக்கையாக அமையவில்லை என்பது தெளிவாக புலப்படுகிறது. இப்போது இதில் அமைப்பு ரீதியாக மாற்றம் கொண்டுவர வேண்டிய கட்டாயம் உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த பிரச்சினையை அரசாங்கம் அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதை பெரிதாக அரசியல் கட்சிகள் யாருமே கையில் எடுக்காத நிலையில், அதையும் ஒரு பிரச்சனையாக கையில் எடுத்து, யாருமே பேசாத சம்பவங்களை பேசினார் விஜய். சம்பவம் நடக்கும் போது அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவிக்கிறார்கள். ஆனால் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அணுகி அவர்களுடைய வலியை புரிந்து கொண்டு, அதன் பின் அதை ஒட்டுமொத்தமாக போராட்டத்தின் மூலம் அடையாளப்படுத்தியுள்ளார். என் 20 ஆண்டுகால பத்திரிகை வாழ்கையில் காவல் மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இப்படி நிற்க வைத்து, யாரும் தனி போராட்டம் நடத்தவில்லை. பாரம்பரிய எதிர்க்கட்சிகள் செய்யத் தவறிய ஒன்றை விஜய் கையில் எடுத்து செய்து காட்டியிருக்கிறார் என்பதை உண்மையில் பெரிய விஷயமாக பார்க்கிறேன்" என கூறினார்.