ஜனசேனா கட்சியினர் பழனியில் தரிசனம் pt desk
தமிழ்நாடு

“ராணுவத்திற்கும் தலைமைக்கும் தெய்வீக பலம் கிடைக்க வேண்டும்” - ஜனசேனா கட்சியினர் பழனியில் தரிசனம்

இந்திய இராணுவத்தினருக்கும் நாட்டின் தலைமைக்கும் தெய்வீக பலம் கிடைக்க வேண்டி ஆந்திர மாநில ஜனசேனா கட்சி எம்எல்ஏ தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்டோர் பழனியில் சாமி தரிசனம் செய்தனர்.

PT WEB

செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு.

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்திய இராணுவம் பாகிஸ்தானுக்குள் இருந்த தீவிரவாத முகாம்களை வேட்டையாடியது. இதையடுத்து பாகிஸ்தான் இராணுவத்தினருக்கும் இந்திய இராணுவத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் இந்திய இராணுவத்தினருக்கும் இந்திய தலைமைக்கும் கடவுள் அருள் மற்றும் ஆன்மிக பலம் கிடைக்க வேண்டி தமிழகத்தில் அறுபடை வீடுகளில் உள்ள முருகன் கோயில்களிலும் ஜனசேனா கட்சியின் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும் என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து ஜனசேனா கட்சியைச் சேர்ந்த காக்கிநாடா சட்டமன்ற உறுப்பினர் பந்தம் வெங்கடேஸ்வர ராவ், தலைமையிலான ஜனசேனா கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோயிலுக்கு இன்று வருகை தந்து இந்திய ராணுவத்திற்கும், பிரதமர் மோடி பெயரிலும் அர்ச்சனை செய்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காக்கிநாடா சட்டமன்ற உறுப்பினர் பந்தம் வெங்கடேஸ்வர ராவ் பேசியபோது...

“ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் வழிகாட்டுதலின் படி, ஆறுபடை வீடுகளின் முருகன் கோயில்களில் பிரார்த்தனை நடத்தப்பட்டது. தீவிரவாதத்தை ஒழிக்கும் வகையில் இந்திய இராணுவம் மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் நமது இந்திய இராணுவத்தின் வலிமை உலகிற்கு தெரிய வந்துள்ளது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின், 'தேசமே முதலாவது - அரசியல், மற்ற அனைத்தும் அடுத்ததுதான்' என்ற நம்பிக்கையை வலியுறுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் ஜனசேனா கட்சியின் சார்பில் வழிபாடு நடத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.