திருக்கடையூர் | அபிராமியம்மன் கோயில் சித்திரை தெப்பத் திருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு
செய்தியாளர்: ஆர்.மோகன்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆயுள் விருத்திக்காக பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து சாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மேலும் பல்வேறு சிறப்புடைய இவ்வாலயத்தில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், திருக்கல்யாணம், எமசம்ஹாரம், தேர் திருவிழா, ஆகிய விழாக்கள் நிறைவடைந்த நிலையில், இன்று தெப்பத் திருவிழா நடைபெற்றது.
அதனை முன்னிட்டு விநாயகர் சாமிக்கு பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தெப்பத்தில் எழுந்தருள செய்தனர். இதையடுத்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோயில் தீர்த்த குளத்தில் 5முறை தெப்பம் வளம் வந்து உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.