Fact Check FACEBOOK
தமிழ்நாடு

Fact Check | விஸ்வகர்மா Vs கலைஞர் கைவினைத் திட்டம்... இரண்டும் ஒன்றா?

கலைஞர் கைவினைத் திட்டமும் விஷ்வகர்மா திட்டமும் ஒன்று என்று பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் வைத்த நிலையில், இதுத்தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு ஒன்றினை tnfactcheck முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

கலைஞர் கைவினைத் திட்டமும் விஷ்வகர்மா திட்டமும் ஒன்று என்று பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் வைத்த நிலையில், இதுத்தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு ஒன்றினை tnfactcheck சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

“விஸ்வகர்மா திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டி பெயரை மாற்றி வெளியிட்டுள்ளது திமுக அரசு” என்று மீம் ஒன்றை வெளியிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளப்பக்கத்தில் நேற்று பதிவிட்டு விமர்சித்திருந்தார்.

அதில், “பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தைத் தமிழகத்தில் செயல்படுத்தாமல் குழப்பம் ஏற்படுத்தியதால், தமிழக மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. அதை கையாள முடியாமல் விஸ்வகர்மா திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டி பெயரை மாற்றி வெளியிட்டுள்ளது திமுக. திமுக அரசால் தொடங்கப்பட்டுள்ள இந்தப் புதிய திட்டம் (கலைஞர் கைவினைத்திட்டம்), திமுக தொண்டர்களுக்குப் பயனளிப்பதற்காக மட்டுமே சில தகுதித் தளர்வுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்துக்காக விண்ணப்பித்த தமிழக மக்கள் 8.4 லட்சம் பேருக்குத் துரோகம் இழைத்துவிட்டு, இந்த உருமாற்றப்பட்ட திட்டத்தின் மூலம் திமுக தொண்டர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை பிணையில்லாக் கடன்களை வழங்கி, உண்மையான பயனாளிகளுக்குப் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மானியங்களின் நோக்கத்தையே நீர்த்துப் போகச் செய்திருக்கிறது இந்த திமுக அரசு. மக்களுக்குப் பயனளிக்காத அரசியல், அர்த்தமற்றது என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள விஸ்வகர்மா திட்டமும், தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினைத்திட்டமும் ஒன்றா? என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகமான tnfactcheck அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அந்தப் பதிவில், “ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விஸ்வகர்மா திட்டமும், தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினைத் திட்டமும் ஒன்றா?

விஸ்வகர்மா திட்டத்தில் இணைய உள்ள விதிகளில் “குடும்ப அடிப்படையிலான பாரம்பரிய தொழில் செய்திருக்க வேண்டும், விண்ணப்பிக்கும் தேதியில் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதே வேளையில் விண்ணப்பிக்கும் முன்பே அத்தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும்” என்று உள்ளது. மேலும், அடிப்படை பயிற்சியும், உயர்நிலை பயிற்சியும் வழங்குதல், அவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்குதல், கடன் உதவிகளை வழங்குதல் ஆகியவையே இத்திட்டத்தின் செயல்பாடுகள்.

இது, தங்கள் குடும்பத் தொழிலில் 18 வயதிருக்கு முன்பே ஈடுபடத் தூண்டும் வகையில் உள்ளது. இது மாணவர்களை உயர்கல்வி கற்கும் ஆர்வத்தைக் குறைத்து குலத் தொழிலில் தள்ளும் என்பதால் இதில் தமிழ்நாடு அரசு இணையவில்லை.

குலத்தொழில் ஊக்குவிப்பாக இல்லாமல், மாணவர்கள் உயர்கல்வி கனவைச் சிதைக்காமல் அதே நேரத்தில் இவ்வகை தொழில் ஈடுபடுவோருக்கு உதவும் வகையில் ஒரு திட்டம் வேண்டும் என, 'கலைஞர் கைவினைத் திட்டம்' முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் நிதியில் செயல்படுத்தப்படுகிறது.

கலைஞர் கைவினைத் திட்டம்

இதில் இணைவதற்கான வயது குறைந்தபட்ச வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்ப / வகுப்பு அடிப்படையில் அல்லாமல் 25 கைவினைத் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் , வகுப்பு அடிப்படையில் எனச் சுருங்காமல், தொழில் ஈடுபடுவோருக்கு மட்டும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது .

இன்று தமிழ்நாடு அரசு சார்பாக வந்த விளம்பரத்தில் விண்ணப்பிக்கத் தகுதி என்பதில் 35 வயது நிரம்பியவர்களுக்கு என்றும், எந்த வகுப்பினராகவும் இருக்கலாம் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது .

இந்த இரண்டு திட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாமல் பலரும் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.