தமிழ்நாட்டின் கடன் கட்டுக்குள் உள்ளது.. வெளியான தகவல்!
தமிழ்நாட்டை பொருத்தவரையில் மாநிலத்தின் கடன் கட்டுக்குள் உள்ளது என்று இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு மீதான மாநில நிதி தணிக்கை அறிக்கையை இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறை வெளியிட்டது. 2022-2023 வரையிலான கணக்கு தணிக்கை முடிவுகளை முதன்மை கணக்காய்வுத் தலைவர் ஜெய்சங்கர் மற்றும் முதன்மை கணக்காய்வு தலைவர் கே.பி.ஆனந்த் ஆகியோர் சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர் சந்திப்பின்போது வெளியிட்டனர்.
இதன்படி, 2021-2022ல் 46,538 கோடி கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை 2022-2023 - ல் 36,215 கோடியாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டின் வருவாய் வரவுகளை விட இவ்வாண்டின் வரவுகள் 17% அதிகரிப்பதே இதற்கு காரணம் .
மாநிலத்தின் தனிநபர் GSDP தேசிய சராசரியை விட கிட்டத்தட்ட 56% அதிகமாக இருந்தது. தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மொத்த கடன் 21,980 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 2017க்கு முன்பாக 6,467 கோடி ரூபாயாக இருந்த கடன் 3 மடங்கு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக மாநில போக்குவரத்து கழகம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கான சுகாதார நல்வாழ்வுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 69 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.