அன்புமணி - ராமதாஸ்  எக்ஸ் தளம்
தமிழ்நாடு

திருமால்வளவன் முன்னே.. அன்புமணி பின்னே... ஒரே நாளில் அடுத்தடுத்த சந்திப்பு – பாமகவில் நடப்பது என்ன?

தைலாபுரத்தைச் சுற்றிச் சுழலும் மனக்கசப்பு விவகாரம் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதே பாமக தொண்டர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.

PT WEB

மருத்துவர் ராமதாஸை சந்தித்துப் பேசிய திருமால்வளவன்:

பாமகவில் மருத்துவர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே மனக்கசப்பு நீடித்து வருகிறது. இதனிடையே, கட்சியில் இருந்து பிரிந்த பிறகு 15 ஆண்டுகள் கழித்து மருத்துவர் ராமதாஸை நேற்று சந்தித்து பேசினார் தவாக-வின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் திருமால்வளவன். நேற்றைய சந்திப்புக்குப் பிறகு சில முக்கிய விடயங்களைக் கூறிய அவர், நான் வந்து சென்றால் அன்புமணியும் வருவார்.. அய்யாவிடம் பேசுவார் என்று கூறிவிட்டுச் சென்றார். அதன்படியே அன்புமணியும் இன்று தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று ராமதாஸை சந்தித்திருக்கிறார். யானை வரும் முன்னே.. மணி ஓசை வரும் பின்னே என்பதுபோல, திருமால்வளவனைத் தொடர்ந்து அன்புமணியின் சந்திப்பு கவனம் ஈர்த்திருக்கிறது. இந்த நேரத்தில், தைலாபுரம் தோட்டத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்...

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ்:

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஏப்ரலில் அன்புமணியை பாமக தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்துவிட்டு, செயல் தலைவர் பதவியில் நியமித்து அறிவித்தார் மருத்துவர் ராமதாஸ். இருவருக்கும் சிறு மனக்கசப்புதான் என்று நினைக்கையில் சில தினங்களுக்கு முன்னதாக தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராம்தாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்தும் அன்புமணி:

ராமதாஸ் ஒரு பக்கம் ஆலோசனைக் கூட்டம் நடத்த, அன்புமணியும் தனியாக தனது ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால், பாமக முக்கிய நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில்தான், தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவரும், வேல் முருகனின் சகோதரனுமான திருமால்வளவன் நேற்றைய தினம் ராமதாஸை சந்தித்து பேசினார்.

அன்புமணி - ராமதாஸ்.png

15 ஆண்டுகளுக்குப் பிறகு ராமதாஸை சந்தித்து பேசிய திருமால்வளவன்:

2011ம் ஆண்டுக்கு முன்பு வரை பாமகவில் முக்கிய முகமாக இருந்த திருமால்வளவன், அவரது சகோதரர் வேல்முருகன் பாமகவில் இருந்து வெளியேற்றப்பட்டபோது, அவரும் கட்சியில் இருந்து வெளியேறினார். இப்போது வேல்முருகனின் தவாக-வில் பயணித்து வரும் இவர், 15 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்றைய தினம் ராமதாஸை சந்தித்து பேசினார். ராமதாஸ், அன்புமணி இடையே மனக்கசப்பு நீடித்து வரும் நிலையில், ராமதாஸ் உடனான திருமால்வளவனின் சந்திப்பு கவனம் ஈர்த்தது. அதோடு, சந்திப்பு முடிந்து கிளம்புகையில், ராமதாஸை நான் சந்திக்க வந்தாலே அன்புமணி தைலாபுரத்திற்கு வந்துவிடுவார்.. அவர் வரவேண்டும் என்பதாலும் ராமதாஸை சந்திக்க வந்தேன் என்று சூசகமாக தெரிவித்துச் சென்றார்.

கையெடுத்து கும்பிட்டபடி இறுகிய முகத்தோடு சென்ற அன்புமணி:

அதன்படியே, தனது இளைய மகள் சஞ்சுத்ராவை அழைத்துக் கொண்டு இன்று தைலாபுரம் சென்ற அன்புமணி, தந்தை ராமதாஸை சந்தித்து பேசினார். சுமார் 45 நிமிடங்கள் வரை நீண்ட இந்த சந்திப்பில், தலைவர் பதவியை மீண்டும் வழங்க வேண்டுமென வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. தொடர்ந்து, சந்திப்பிற்குப் பிறகு வெளியே வந்த அன்புமணியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, கார் கண்ணாடியை கூட இறக்காமல் கையெடுத்து கும்பிட்டபடி இறுகிய முகத்தோடு சென்றுவிட்டார். இதற்கிடையே ஆடிட்டர் குருமூர்த்தியும் ராமதாஸை சந்தித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தந்தை மகன் பிரிந்து இருக்கும் இந்த நேரத்தில், நேரெதிர் துருவத்தில் நின்ற வேல்முருகன் தரப்பு இப்போது ராமதாஸுடன் நெருக்கம் காட்டி வருகிறது. தைலாபுரத்தைச் சுற்றிச் சுழலும் மனக்கசப்பு விவகாரம் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதே பாமக தொண்டர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.