சிறுமலை | பணிகள் முடிந்து 3 ஆண்டுகளாக திறக்கப்படாத பல்லுயிர் பூங்கா.. வீணான பேட்டரி சைக்கிள்கள்!
செய்தியாளர்: காளிராஜன் த
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் அமைந்துள்ள சிறுமலை, 18 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. கொடைக்கானலுக்கு நிகரான சீதோசன நிலை இங்கும் உள்ளது. இதனால் சிறுமலையை சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. அந்த வகையில் சிறுமலை பல்லுயிர் பூங்கா 2019ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளில் முடிவடைந்து திறக்கப்படும் எனக் கூறியிருந்த நிலையில், 6 ஆண்டுகளாகியும் தற்போது வரை திறக்கப்படவில்லை.
இதுகுறித்து கடந்த வாரம் உயர்நீதிமன்ற மதுரை கிளை விரைவாக பல்லுயிர் பூங்காவை திறக்க வேண்டும் என உத்தரவிட்டது. 120 ஏக்கரில் அமைந்துள்ள சிறுமலை பல்லுயிர் பூங்காவில் மூலிகைச் செடிகள், பூந்தோட்டம், சிறுவர் பூங்கா, மலைகளைக் கண்டு ரசிக்கும் உயர் கோபுரம், பல்லுயிர் பகுதி, வண்ணத்துப்பூச்சி பூங்கா, உயர் கோபுரம் மர வீடு, குடில்கள், மூங்கில் காடு, பூச்சிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் பறவைகள் காட்சி விளக்கக் கூடம், சுற்றுலா பயணிகள் இரவில் தங்குவதற்கு மரத்தாலான தங்கும் அறை, சோலார் மூலம் மின்சாரம், மொபைல் கழிப்பறை, சுத்திகரிப்பு எந்திரத்துடன் தண்ணீர் சேகரிப்பு தொட்டி மற்றும் 120 ஏக்கர் பரப்பளவைச் சுற்றி பார்ப்பதற்காக 4 பேட்டரி சைக்கிள்கள் மற்றும் சிறுவர்களுக்கான 1 பேட்டரி சைக்கிள் ஆகியவை உள்ளன.
பல்லுயிர் பூங்கா திற்கப்படாததால் ரூ.2 லட்சத்திற்கு மேல் செலவு செய்து வாங்கிய 4 பேட்டரி இருசக்கர வாகனம் 1 சிறுவர் பேட்டரி கார் தூசி அடைந்து வீணாகி உள்ளது. சிறுமலை பல்லுயிர் பூங்காவில் வீணாகிய பேட்டரி இருசக்கர வாகனங்கள் குறித்து திண்டுக்கல் வனத்துறை தரப்பில் விளக்கம் கேட்டதற்கு விரைவாக பல்லுயிர் பூங்கா திறக்கப்படும் என்று மட்டுமே தெரிவித்தனர்