உயிரிழந்த அஜித் குமார் pt web
தமிழ்நாடு

அஜித் குமார் உயிரிழந்த விவகாரம்.. வெளியான முக்கிய ஆதாரம்.. 5 காவலர்கள் கைது

சிவகங்கை மடபுரத்தில் இளைஞர் அஜித் குமார் உயிரிழப்பு விவகாரத்தில் 5 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

PT WEB

சிவகங்கை மடபுரத்தில் இளைஞர் அஜித் குமார் உயிரிழப்பு விவகாரத்தில் காவல்துறையினரின் எஃப் ஐ ஆர் தகவல் வெளியாகியிருந்தது. அதில், போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயலும்போது கீழே விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டதில் அஜித் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வெளியான முதல் தகவல் அறிக்கையில், மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் அளித்த உத்தரவைத் தொடர்ந்து, மடப்புரம் கோவிலில் சாமி கும்பிட வந்த நிக்கிதா என்ற பெண்ணின் காரில் இருந்த நகை மற்றும் பணம் காணாமல் போனது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்த சம்பவம் தொடர்பாக கோவிலில் காவலாளியாக இருந்த அஜித் குமார் மீது சந்தேகம் எழுந்ததால் அவரை விசாரணைக்காக அழைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த அஜித் குமார்

மேலும், விசாரணையின் போது அஜித் குமாரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதாகவும், விசாரணையில் காரை யார் பார்க்கிங் செய்தனர் என கேட்டபோது, அவர் மாறி மாறி மூன்று நபர்களின் பெயர்களை கூறினார் எனவும் எஃப் ஐ ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முதலில் சரவணன், பிறகு அருண், பின்னர் தினகரன் எனத் தெரிவித்திருக்கிறார். ஆனால், அவர்களை அழைத்து விசாரித்த போது, அவர்கள் யாரும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்றும், காரின் சாவி முழுமையாக அஜித்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்றும் தெரிவித்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அஜித் குமாரின் தம்பி நவீனை விசாரிக்கக் கொண்டு செல்லப்பட்டபோது, அஜித்தான் நகையை எடுத்ததாக ஒப்புக்கொண்டதாகவும் மேலும், திருடிய நகைகளை கோவிலுக்குப் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். அங்கு சென்று போலீசார் தேடியபோதும் நகை கிடைக்கவில்லை என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, அஜித் தப்பிப் போவதற்காக ஓடியதாகவும், அந்த நேரத்தில் தவறி விழுந்ததாகவும், பின்னர் அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும், அவரை உடனே திருப்புவனம் மருத்துவமனைக்கும், பின்னர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும், இதனையடுத்து மதுரை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றதாகவும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், அங்கு சென்றபோது, வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின் பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உயர் போலீஸ் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.. பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.