பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு
பெரிய தொழில், பெரிய வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்வதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 3.16 சதவீதத்துக்கு மிகாமல் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருக்கிறார். மேலும், அனைத்து வீட்டு மின் இணைப்புகளுக்கு கட்டண உயர்வு இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2025-26 ஆம் ஆண்டின் மின்கட்டண உயர்வின் படி தமிழ்நாட்டில் சுமார் 2.83 கோடி மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லாமல் பயனடைவார்கள். இதனால் தமிழக அரசிற்கு ஆண்டொன்றுக்கு ரூ.519.84 கோடி கூடுதல் செலவாகும். இந்த மானியத் தொகையினை தமிழக அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கும்.
இது தவிர பெரிய தொழில், பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் பிறவகை கட்டண பிரிவுகளுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ளவாறு 3.16%-க்கு மிகாமல் மின்கட்டணம் உயர்த்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.