madras iit x page
தமிழ்நாடு

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல்.. தொடர்ந்து 7ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம்!

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தொடர்ந்து 7ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.

PT WEB

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தொடர்ந்து 7ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம் ஒவ்வோர் ஆண்டும் நாட்டில் உள்ள நிறுவனங்களை பொறியியல், பல்கலை மற்றும் மேலாண்மை என பல்வேறு பிரிவுகளிலும் திறனாய்வு செய்து தேசிய நிறுவன தரவரிசையை வெளியிடும். கல்வித் துறையினர் மத்தியில் மிகுந்த மதிப்போடு பார்க்கப்படும் ஒரு மதிப்பீடு இது. அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.

anna university

மொத்தம் 14,163 நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பல்வேறு கூறுகளின் அடிப்படையில் ஆய்வு செய்து உருவாக்கப்பட்ட இந்தத் தரவரிசைப் பட்டியலில், தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள் சிறப்பான இடங்களைப் பெற்றுள்ளன. தேசிய அளவில், கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில், தலைசிறந்த முதல் 100 உயர்கல்வி நிறுவனங்களில் 17; சிறந்த 100 கல்லூரிகளில் 33; சிறந்த 50 மாநிலப் பல்கலைக்கழகங்களில் 10 எனப் பட்டியலில் அதிகமான கல்வி நிறுவனங்களுடன் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது தமிழகம்.

தலைசிறந்த முதல் 100 இடங்களுக்குள் வந்த தமிழகத்தின் 17 நிறுவனங்களில், சென்னை ஐஐடி, அமிர்தா விஸ்வ வித்யாபீடம், வி.ஐ.டி, எஸ்.ஆர்.எம்., சவீதா ஆகியவை முதல் 5 இடங்களில் வந்துள்ளன. தேசிய அளவிலான கவனிக்கத்தக்க இடங்களைப் பெற்ற தமிழக கல்வி நிறுவனங்களில், சென்னை ஐஐடி சிறப்பிடம் பெறுகிறது. ஒட்டுமொத்த செயல்பாடுகள் சார்ந்தும், பொறியியல், புதிய கண்டுபிடிப்புகளுக்கான பிரிவுகளிலும் தேசிய அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது சென்னை ஐஐடி. இந்த தரவரிசை பட்டியலில் அடுத்து, கவனம் ஈர்க்கும் இடத்தைப் பெற்றுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

srm university

முந்தைய ஆண்டுகளை ஒப்பிட சறுக்கலை சந்தித்திருந்தாலும், மாநில அரசுகள் நடத்தும் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், புதிய கண்டுபிடிப்புகளுக்கான பிரிவிலும், தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளது. அடுத்து, கவனம் ஈர்க்கும் இடத்தை பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் இடம்பெற்று எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் பெற்றுள்ளது. மருத்துவம், பொறியியல், சட்டம், மேலாண்மை, கட்டுமானவியல், ஆராய்ச்சி என்று பல்வேறு துறைகளிலும் சிறப்பிடங்களை பெற்றுள்ளதன் வாயிலாக தனியார் கல்வி நிறுவனங்களில் வலுவான இடத்தைப் பெற்றுள்ளது எஸ்ஆர்எம்.