இந்தியாவிலேயே முதன்முறை.. LED திரைகளுக்கான ஆராய்ச்சிக்கு புதிய ஆய்வகம்.. சென்னை ஐஐடி அசத்தல்
செய்தியாளர் பால வெற்றிவேல்
இந்தியாவிலேயே முதல்முறையாக எல்.இ.டி திரை குறித்த ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக புதிய ஆய்வகத்தை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. அமோலெட்(AMOLED) டிஸ்பிளேக்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி மையத்தால் இந்தியாவிலேயே எல்இடி டிஸ்ப்ளே உருவாக்கம் அதிகரிக்கவும் அதன் விலை வருங்காலத்தில் குறையும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மின்னணு சாதனங்களை நம்மோடு இணைப்பது டிஜிட்டல் திரைகள் தான். 15 வருடங்களுக்கு முன்பு LCD திரைகள் அதிக பயன்பாட்டோடு இருந்த நிலையில் தற்போது அனைத்தும் LED திரைகளாக மாறிவிட்டன. LCD திரைகளில் திரவ வடிவத்தில் இருக்கும் வேதியியல் பொருட்கள் நிரம்பி நமக்கு காட்சிகளாக வழங்கிய நிலையில், LED திரைகளில் மைக்ரோ அளவிலான வெளிச்சம் பாய்ச்சும் டையோடுகளே இயங்கு பொருளாக விளங்குகிறது. LED திரைகளுக்குள் ஒளிந்திருக்கும் தொழில்நுட்பத்தை தெரிந்து கொண்டால் நமக்கு தலையே சுற்றி விடும். நமது முடியை விட 100 மடங்கு சிறிதாக இருக்கும் குட்டி டயோடுகள் தான் வெளிச்சத்தை பாய்ச்சி காட்சிகளை நமக்கு காண்பிக்கிறது. இதற்கான தொழில் நுட்பம் இவ்வளவு நாட்கள் கிழக்கு ஆசிய நாடுகளிடமே இருந்த நிலையில் முதல் முறையாக எல். இ.டி குறித்தான ஆராய்ச்சி மையம் சென்னை ஐஐடியில் தொடங்கப்பட்டுள்ளது.
இதை உருவாக்குவதற்கு காற்று புகாத ஆய்வகங்கள் அமைப்பது அவசியம் என்கிற நிலையில், ஒரு கன அடிக்கு நூறு மைக்ரோ துகள்கள் கூட ஆய்வகத்திற்குள் செல்லக்கூடாது என்பதால் பார்த்து பார்த்து வடிவமைத்துள்ளனர். சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள். நாம் ஸ்மார்ட் போனில் பயன்படுத்தும் திரை ஒவ்வொரு வினாடிக்கும் 60 முறை அணைந்து எரியும் நிலையில் ஒவ்வொரு திரையும் குறைந்தபட்சம் 25 மிக மெல்லிய அடுக்குகளை கொண்டதாக இருக்கிறது. இதை அனைத்தையும் சாத்தியப்படுத்தும் உயர்ரக கருவிகளோடு ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் LED திரைகளின் சந்தை மதிப்பு 12 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் LED திரைகள் கொண்ட ஸ்மார்ட்போன், டிவி, டிஜிட்டல் கேட்ஜெட்களை இறக்குமதி செய்யும் இரண்டாவது நாடாக இந்தியா தான் இருக்கிறது. இனி அந்த நிலை மாற வாய்ப்புகள் உருவாகக்கூடும் என நம்பலாம்.