சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் கடந்த 23 ம் தேதி கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ள நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக ஞானசேகரனை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில், ஞானசேகரன் எப்படி போலீசாரிடம் பிடிப்பட்டார் என்ற பின்னணி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 23ஆம் தேதி இரவு அண்ணா பல்கலைகழக வளாகத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட போது, ஞானசேகரன் காவல்துறையிடம் சிக்காமல் இருக்க தனது செல்போனை பிளைட் மோடில் வைத்து வீடியோ எடுத்திருப்பதும் பின்னர் செல்போனில் மற்றொரு நபரிடம் பேசுவது போல நாடகமாடி மாணவியை மிரட்டி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இரவு முழுவதும் அழுதுக்கொண்டே இருந்து நிலையில், 24 ஆம் தேதி காலை சகத்தோழிகள் உதவியுடன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பாதிக்கப்பட்ட மாணவி புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் பல்கலைக்கழகத்தில் சந்தேகப்படும்படியான நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின் எழுத்துபூர்வமாக புகார் அளித்துள்ளார்.
குறிப்பாக சம்பவம் நடந்த இடத்தில் இருட்டான பகுதி என்பதால் அங்கு ஞானசேகரினின் முகம் சிசிடிவி காட்சியில் தெளிவாக பதிவாகவில்லை எனவும் ஆனால், முகத்தை மூடிய நிலையில் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து, போலீசார் இதேபோல் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யக்கூடிய பழைய குற்றவாளி ஞானசேகரனைப் பிடித்து சந்தேகத்தின் பெயரில் விசாரணை மேற்கொண்டனர். பெண்களை மிரட்டி பாலியல் சீண்டல் செய்யும் ஞானசேகரனை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, அவர் அந்த குறிப்பிட்ட நேரத்தில் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்திருந்ததும், பின் செல்போனில் இருந்த தடயங்கள் அழிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. பின்னர் அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு செல்போனை பறிமுதல் செய்து காவல்துறையினர் ஞானசேகரனை அனுப்பியுள்ளனர்.
தொடர்ந்து, போலீசார் அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்த அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தபோது ஞானசேகரன் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், டவர் டம்ப் முறையில் சோதனை செய்த போது ஞானசேகரன் பல்கலை.க்குள் சென்றது தெரியவந்தது.
இதன் பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை ரெக்கவரி செய்த போது அதில் பாதிக்கப்பட்ட மாணவியின் வீடியோ இருப்பதும், மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அதையும் வீடியோ பதிவு செய்திருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து ஞானசேகரின் வீட்டை சோதனை செய்த போது குற்றத்தில் ஈடுபடும் போது அணிந்திருந்த அதே தொப்பி மற்றும் கருப்பு சட்டை இருந்ததைக் கண்டு போலீசார் ஞானசேகரனை உடனடியாக கைது செய்தனர். போலீசார் தன்னை கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைத்து ஞானசேகரன் தப்பிக்க வில்லை என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இவ்வழக்கு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் உட்பட சந்தேகப்படும்படியான 500 நபர்களை போலீசார் விசாரணை மேற்கொண்டு இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டு இருந்ததாகவும் குறிப்பாக இதே போல எத்தனை பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்? வேறு யாருக்காவது தொடர்பு உண்டா? குறிப்பாக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த போது வேறொரு நபருடன் பேசியதாக பெண் தெரிவித்திருந்த நிலையில், உண்மையிலேயே ஞானசேகரன் வேறொரு நபருடன் பேசினாரா? அல்லது மிரட்டுவதற்காக அப்படி செய்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.