ரூ.13 ஆயிரம் சம்பளம்.. காதலிக்கு சொகுசு கார், வீடு பரிசு.. மகாராஷ்டிரா நபர் காட்டிய கைவரிசை!
மகாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜிநகரில் விளையாட்டு வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் அரசின் சார்பில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றுபவர் ஹர்ஷ் குமார் ஷீர்சாகர். இவர், அந்த அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகப் பணிபுரிந்துள்ளார். அவருக்கு மாதம் 13,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவர் வருமானத்துக்கு மீறி பி.எம்.டபிள்யூ கார் வாங்கி, அதில் வலம் வரத் தொடங்கியுள்ளார். மேலும் 4 பி.எச்.கே. கொண்ட வீடு ஒன்றை, காதலிக்குப் பரிசாக அளித்திருக்கிறார். இதைப் பார்த்த சக பணியாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். தவிர தனது வசதியை மேலும்மேலும் பெருக்கியபடியே இருந்துள்ளார்.
சாகருடன் கூட்டாகச் சேர்ந்துகொண்டு இந்த மோசடியில் ஈடுபட்ட சக பணியாளரின் கணவர் ரூ.35 லட்சம் மதிப்பிலான சொகுசு ரக கார் ஒன்றை சமீபத்தில் வாங்கியுள்ளார். இதனால் சந்தேகம் எழவே சக பணியாளர்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
அதன்பேரில், சக பணியாளருடன் சேர்ந்து ரூ.21 கோடி அளவுக்கு அரசு நிதியை மோசடி செய்தது, அதில் கிடைத்த தொகையை வைத்து சாகர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. விளையாட்டு வளாகத்தின் பழைய லெட்டர்ஹெட்டைப் பயன்படுத்தி வங்கிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். விளையாட்டு வளாகத்தின் கணக்குடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை மாற்றுமாறு அதில் கோரியுள்ளார்.
பிறகு, விளையாட்டு வளாகத்தின் கணக்கைப் போன்ற முகவரியுடன் புதிய மின்னஞ்சல் கணக்கை அவர் திறந்துள்ளார். அந்த மின்னஞ்சல் முகவரி இப்போது விளையாட்டு வளாகத்தின் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. அதைவைத்து, ஹர்ஷல் வங்கிப் பரிவர்த்தனையை மேற்கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் நடப்பாண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை 13 வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.21.6 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பணத்தை வைத்தே ரூ.1.2 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரும், ரூ.1.3 கோடி மதிப்புள்ள எஸ்யூவியும், ரூ.32 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ பைக்கும் வாங்க பயன்படுத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
மோசடியில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பொலீஸார், தற்போது பணம் பறிக்க பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களை சேகரித்து வருகின்றனர். ஹர்ஷலை கைது செய்வதற்காக போலீஸார் சோதனைகளை மேற்கொண்டு வரும் நிலையில் சொகுசு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட சாகருடன் யசோதா ஷெட்டி மற்றும் அவருடைய கணவர் ஜீவன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.