Madurai corporation PT - WEB
தமிழ்நாடு

மதுரை |"எங்கள் பாஸ்வேர்டை திருடி மேலதிகாரிகள்.." சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களின் பகீர் குற்றச்சாட்டு

மதுரை மாநகராட்சியில் ரூபாய் 150 கோடி மோசடியில் இதுவரை 10 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதில் 19 அதிகாரிகள் பணியிட நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை இந்த மோசடியில் நடந்தது என்ன? என்பது குறித்து பதிவில் தெரிந்துக் கொள்ளாலாம்..

PT WEB

செய்தியாளர் - பிரசன்ன வெங்கடேஷ்

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடிக்கும் மேற்பட்ட சொத்து வரி மோசடி விவகாரம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் வணிகக் கட்டடங்களுக்கு குறைந்த சொத்து வரி விதிக்கப்பட்டு அரசுக்கு ரூ.150 கோடி வருமான இழப்பு ஏற்படுத்திய இந்த முறைகேடில், தற்போது வரை முன்னாள் உதவி ஆணையர் உட்பட 10 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 19 அதிகாரிகள் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

Madurai corporation

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில், மாநகராட்சியில் பணியாற்றிய 5 மண்டலத் தலைவர்கள் மற்றும் 2 நிலைக் குழுத் தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்த நடவடிக்கைகள், திமுக தலைமையையே கடும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளன.

இந்நிலையில், தற்போது இந்த விவகாரம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பணியிடைநீக்கம் செய்யப்பட்ட பில் கலெக்டர்கள் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த மோசடி 2017-இலிருந்தே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எங்களுடைய பாஸ்வேர்டுகளை அதிகாரிகள் திருட்டுத்தனமாக பயன்படுத்தி, வணிகக் கட்டிடங்களுக்கு வரி குறைப்பு செய்துள்ளனர். எங்களது பாஸ்வேர்டு தவறாக பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்ததும், பாதுகாப்புக்காக காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயற்சித்தோம். ஆனால் மேலதிகாரிகள் அதனைத் தடுத்து நிறுத்தினர்.

எங்கள் பாஸ்வேர்டுகளை, மேலதிகாரிகள் வற்புறுத்தி பெற்றபின், அந்த பாஸ்வேர்டுகளை கொண்டு வேறு மண்டலங்களில் வரி குறைப்பு செய்துள்ளனர். ஒரே பாஸ்வேர்டால் வரி குறைப்பு செய்ய இயலாது அனைத்து அதிகாரிகளின் அனுமதியும் தேவைப்படும்.

ஆனால் எங்களுடைய பாஸ்வேர்டை மட்டுமே வைத்து குற்றம் சுமத்தி, பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த முறைகேடில் தொடர்புடைய அனைத்து நிலைகளிலும் இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்..

Madurai corporation

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் கூறுகையில்,” மேற்கண்ட இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக மத்திய குற்ற பிரிவில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட அத்தனை அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தனர்.