புயல் கரையைக் கடக்க நாளை அதிகாலை வரை தாமதமாகலாம். புயல் கடற்கரை அருகே மையம் கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை - புதுச்சேரி இடையே மரக்காணம் - மாமல்லபுரம் அருகே புயல் கரையைக் கடக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கூறுகையில், புயல் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. கடந்த 2 நாட்களாகவே அரபிக் உயரழுத்தம், பசுபிக் உயரழுத்தம் என இருவேறு தாக்கங்கள் இருந்தது. தற்போது பசுபிக் உயரழுத்தம் காரணமாக மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. புயல் கரையை நெருங்கும்போது, நிலபரப்பினை அடைய முற்படும்போது அரபிய உயரழுத்தத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். அப்படி ஆகும்பட்சத்தில் ஒரே இடத்தில் புயல் நிலை கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
அப்படி புயல் ஒரே இடத்தில் நிலைகொள்ளும் பட்சத்தில் புயல் கரையைக் கடப்பதற்கான நிகழ்வு நாளை காலை வரை நீடிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
பொதுவாக ஒரு இடத்தில் புயல் மையம் கொண்டால், அது நகர்ந்து வந்த பாதையில் இருந்து திசை மாறி நகரத்தொடங்கும். அப்படிப்பார்க்கும்போது, சென்னைக்கும் புதுவைக்கும் இடையே மரக்காணம் - மகாபலிபுரத்திற்கு அருகே ஒரே இடத்தில் மையம் கொண்டு, பின் நாளை காலை முதல் கரையைக் கடக்கத் தொடங்கி தெற்கு தென்மேற்காக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மழைப்பொழிவு சென்னையில் குறைந்திருந்தாலும், வரக்கூடிய மழை நேரங்களில் மழைப் பொழ்வு மீண்டும் அதிகரிக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் அதீத கனமழையும், குறைவான நேரத்தில் தீவிர மழைப்பொழிவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றின் வேகத்தினைப் பொறுத்தவரை தற்போதே பல இடங்களில் 50 முதல் 60 கிமீ வேகத்தில் வீசுவதைப் பார்க்கிறோம். கடலிலேயே புயல் மையம் கொள்ளும்போது காற்றின் வேகம் அதிகரிக்காது. சற்று குறைவாகும். மழை மேகங்கள்தான் அடிக்கடி உருவாகி கரையை நோக்கி வரும். புயல் கரையைக் கடப்பதில் தாமதமடைகிறதே தவிர, அதன் தீவிரம் குறையவில்லை. புயலாகவே கரையைக் கடக்க இருக்கிறது. அதன்காரணமாக மழைப்பொழிவு அதிகமாக உருக்கும்” என தெரிவித்துள்ளார்.