தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரியலூர், தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், விழுப்புரம், கடலூர், திருச்சி, சிவகங்கை, நாகை, மயிலாடுதுறை, கோவை, திருப்பூர், மதுரை, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மழை தொடர்பாக சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக தகவல் தெரிவித்தார். அவர் கூறுகையில், “தமிழகத்தில் இன்றும் நாளையும் பரவலாக மழை எதிர்பார்க்கலாம். இன்றைய தினம் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் விட்டு விட்டு மழையை எதிர்பார்க்கலாம். அவ்வப்போது கனமழையாக இருக்கக்கூடும்.
நாளை மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரிக்கும். கடலோர மாவட்டங்களில் மழை குறையக்கூடும். இன்று வடகடலோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் பகல் நேரத்தில் விட்டு விட்டு மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. அவ்வப்போது கனமழையாக இருக்கக்கூடும். இன்று இரவு உள் மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் மழையை எதிர்பார்க்கலாம். ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் பரவலான மழைக்கு இன்று வாய்ப்பு இருக்கிறது. கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது.
டெல்டா மாவட்டங்களிலும் பரவலாக கன முதல் மிககனமழை பதிவாகியுள்ளது. நாளையும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. ஒட்டுமொத்த தமிழகத்திலும் டிசம்பர் 14 மற்றும் 15 என இரு தினங்கள் மழைப் பொழிவு குறைந்து காணப்படும். மீண்டும் அடுத்த சுற்று மழைப்பொழிவு டிசம்பர் 16 ஆம் தேதி மாலை முதல் தொடங்கும். ஏனெனில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி டிசம்பர் 14 ஆம் தேதி அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாவதற்கான சாதகசூழல் காணப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தைப் பொருத்தவரை இன்று கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது. நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஃபெஞ்சல் புயலின்போதே அதிக மழைப்பொழிவை சந்தித்த மாவட்டமாக இருப்பதால், தற்போதைய சூழலில் இந்த குறுகிய மழைப்பொழிவின் தாக்கமே அதிகமாக இருக்கும். ஏனெனில் மண்ணின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது, நீர்நிலைகளிலும் அதிகளவில் நீர் காணப்படுவதால் சற்று கவனமாக இருப்பது நல்லது.
ஃபெஞ்சல் புயல் புயல் சின்னமாகவே இருந்து வலுவிழக்காமல் மழைப்பொழிவைக் கொடுத்தது. இது அப்படிப்பட்ட தீவிரமான நிகழ்வு அல்ல. எனவே பெருமழையாக இல்லாமல், பரவலான மழைக்கு மட்டுமே வாய்ப்பு இருக்கும்” எனத் தெரிவித்தார்.