இனி இந்தியாவிலும்... பார்க்கின்சன்ஸ் நோய்க்கு அறுவை சிகிச்சை இல்லாத நவீன சிகிச்சை!
பார்க்கின்சன்ஸ் எனப்படும் நடுக்குவாதத்திற்கு அறுவை சிகிச்சை இல்லாத நவீன சிகிச்சை இந்தியாவிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. அல்ட்ரா சவுண்ட் நுண் அலைகளை MRI வழிகாட்டுதலுடன் பிரத்தியேக கருவியின் மூலம் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சையின் மூலம் பார்க்கின்சன்ஸ் நோயின் அறிகுறிகளாகிய கை கால் நடுக்கம் குறைகிறது.
வேகமாக நடக்க முடிவதுடன், பேசும் திறனும் மேம்படுவதாகக் கூறும் மருத்துவர்கள் முக்கியமாக மாத்திரையால் ஏற்படும் பக்கவிளைவுகளும் சரி செய்யப்படுவதாகக் கூறுகின்றனர்.
இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் பலகட்ட சோதனைகளுக்குப் பின் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு தற்போது நம் நாட்டிற்கும் வந்துள்ளது.
பார்க்கின்சன் என்றால் என்ன?
நரம்பு மண்டலத்தில் உள்ள டோபமைன் (Dopamine) எனப்படும் ஹார்மோன் சுரப்பு குறையும் போது உண்டாகும் நோயே பார்க்கின்சன். உடலின் தசை இயக்கத்தைப் பெருமளவில் இந்த நோய் பாதிக்கிறது. பேசுவது, எழுதுவது, பார்ப்பது போன்றவற்றிற்குக் கூட இந்நோயால் பாதிப்பட்டவர், மிகவும் சிரமப்படுவார். பெரும்பாலும் முதியோரே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.