தூத்துக்குடி pt web
தமிழ்நாடு

தூத்துக்குடியில் கனமழை; தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. வீடுகளுக்குள் புகுந்த மழை!

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்கள் ராஜன் மற்றும் சுடலைமணிராஜன்

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணையில் சுமார் 50,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏரல் தரைமட்ட பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து நீர் வெளியேறும் பகுதியில் அதிகமான முட்புதர்கள் இருப்பதால் அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

அணையிலிருந்து இரண்டு கரையையும் தொட்டுக்கொண்டு மழை நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஏரல், முக்காணி போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் தற்காலிக முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் மழை வெள்ள தடுப்பு சுவர் பணி முடிவடையாத நிலையில் குடியிருப்பு பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை தவிர்க்க மணல் மூட்டைகளை கொண்டு பாதுகாக்கும் பணியை ஊர் பொதுமக்களோடு இணைந்து நீர்வளத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

கோவில்பட்டி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த பலத்த மழையின் காரணமாக கோவில்பட்டி தாலுகாவில் உள்ள 40 கண்மாய்களும் முழுவதுமாக நிரம்பி தண்ணீர் மறுகால் சென்று வருகிறது. அந்த வகையில் மூப்பன்பட்டியில் உள்ள இரண்டு கண்மாய்களும் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் சங்கரலிங்கபுரம் பகுதியில் 100 வீடுகளுக்கு மேல் மழைநீர் புகுந்து வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் சேதம் அடைந்துள்ளன.