கனமழை எச்சரிக்கை pt web
தமிழ்நாடு

10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை.. நேற்று எங்கெல்லாம் மழை பெய்தது?

கோவை, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

PT WEB

கோவை, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

கோவை மற்றும் நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, மதுரையில் கனமழை பெய்யும் என்றும், திண்டுக்கல், திருச்சி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி, தெடாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் காணப்பட்ட நிலையில் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சேரிங்கிராஸ், மத்திய பேருந்து நிலையம், காந்தல், தொட்டபெட்டா உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்ததில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கடும் குளிரும் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தேனியில் இரண்டாவது நாளாக கனமழை கொட்டித்தீர்த்தது. தேனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. சாலைகளில் ஆறுபோல் பெருக்கெடுத்த மழைநீர், வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

மணப்பாறையில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை கனமழை கொட்டித்தீர்த்தது. சாலைகளில் குளம்போல் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சூறைக்காற்றுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. வட குரும்பூர், மடப்பட்டு, கெடிலம், எலவனாசூர் கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடி பகுதியில் பெய்த கனமழையால், அங்குள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. இந்நிலையில் அந்த வழியாக சென்ற அரசுப்பேருந்து வெள்ளத்தில் சிக்கி நின்றது. பயணிகள் பாதுகாப்பாக வெளியேறிய நிலையில், பேருந்து மீட்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்ததால் குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் நன்னிலம் குடவாசல் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் கடுமையாக வெயில் சுட்டெரித்த நிலையில் இப்போது பெய்துள்ள மழை சற்று சூட்டை தணித்துள்ளது. எனினும் இந்த மழையின் காரணமாக குறுவை அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.