வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும், தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 29 சென்டிமீட்டரும், கோவை சின்ன கல்லாரில் 18 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.