தேனி மாவட்டம் பங்களாமேட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில், "நாமே மாற்று! நாம் தமிழரே மாற்று" என்ற தலைப்பில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்கள் சாட்டை துரைமுருகன் மற்றும் அருண் ஜெயசீலன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். இதில், சாட்டை துரைமுருகன் பேசுகையில், நடிகர் விஜயின்ன் அரசியல் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். தொடர்ந்து தவெக மட்டுமின்றி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி குறித்தும் சாட்டை துரைமுருகன் கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதனிடையே சாட்டை துரைமுருகன் பேசும் போது, தேனி - மதுரை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சிலர் "டிவிகே! டிவிகே! என்றும் தளபதி விஜய் " என்று முழக்கமிட்டு சென்றனர். இதனால், கோபமடைந்த நாம் தமிழர் கட்சியினர், கோஷமிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அங்கிருந்த காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். அப்போது, அவர்களை காவல்துறையினர் சமாதானம் செய்தனர். பின்னர், கூட்டம் முடிந்து சாட்டை துரைமுருகன் புறப்பட்டு சென்ற பின், தேனி - மதுரை சாலையில் தவெக கொடி கட்டிய கார்கள் சத்தத்துடன் வருவதை அறிந்த நாம் தமிழர் கட்சியினர் அவர்களை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தகறாறும் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியினர், தவெகவினரின் கார்களை கைகளால் தட்டி ஆக்ரோஷமாக தாக்கத் தொடங்கினர். அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து தவெகவினரை அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக தேனியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே, கடந்த ஜனவரி கடைசி வாரத்தில், சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகியோரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ வெளியிட்ட தவெக தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டி மீது தேனி நகர் காவல் நிலையத்தில், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்படத்தக்கது.