திராவிட கட்சிகளுக்கு மாற்றாக களமிறங்கிய சீமான்.. நாம் தமிழர் கட்சி கடந்து வந்த பாதை!!
நாம் தமிழர் கட்சி, 1958ல் தொடங்கப்பட்டு, 2010ல் சீமான் தலைமையில் மீண்டும் உயிர் பெற்றது. 2026 தேர்தலுக்கு முன்னதாக, கட்சியின் வளர்ச்சி பாதை மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து அதிக எதிர்பார்ப்பு உள்ளது. 2021 தேர்தலில் 6.6% வாக்குகளைப் பெற்று, 3ஆவது இடத்தைப் பிடித்தது. 2026ல் தனித்தே களம் காணும் நாதக, சாதனை படைக்குமா அல்லது சோதனை தொடருமா என கேள்வி எழுந்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், அரசியல் வட்டாரத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி இதுவரை கடந்து வந்த பாதையை பார்க்கலாம்...
1958ஆம் ஆண்டு, ஆதித்தனாரால் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி, 2010இல் சீமான் தலைமையில் மீண்டும் புத்துயிர் பெற்றது. தமிழ் தேசியம், தனி ஈழம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, திராவிட அரசியலுக்கு மாற்றாக தன்னை நிலை நிறுவ முயன்றார், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 2011 சட்டமன்றத் தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல்களை தவிர்த்த சீமான், 2016 சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் நம் தமிழர் கட்சியை தனித்தே களமிறக்கினார்.
இதில் சீமான் உட்பட நாதக சார்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வியை சந்தித்ததாலும், நாம் தமிழர் 1.7% வாக்குகளைப் பெற்றது. 2017ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 2.15 சதவீத வாக்குகளுடன் 3ஆவது இடம் பெற்றது. இதேபோல், 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், 3.9 சதவீத வாக்குகளை பெற்றது. 2016 தேர்தலின் போது கிடைத்த மெழுகுவர்த்தி சின்னம் இல்லாமல், கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு தமிழ்நாட்டில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும், 3.15 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2021 தேர்தலிலும் 6.6 சதவீத வாக்குகளைப் பெற்று, திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக 3ஆவது இடத்தைப் பிடித்தது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் 8 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்ற நாதக, இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தையும் பெற்றது. இதுவரை எந்தக் கூட்டணியிலும் இடம்பெறாமல் தனித்தே களம் காணும் நாதக, 2026 தேர்தலிலும் அதே வழியை பின்பற்ற முடிவு செய்துள்ளது.
அதேநேரம், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலில் முதன்முறையாக களம் காண்பதால், இனிமேல் நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு எப்படி இருக்கும், சாதனை படைக்குமா அல்லது சோதனை தொடருமா என மிகப் பெரிய கேள்வி எழுந்துள்ளது.
